பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



கங்கையையும் காவிரியையும் இணைத்துப் பாடினார் பாரதியார். இதன் மூலம் வணிகத் தொடர்புபற்றிப் பேசுகிறார். காசி நகர்ப் புலவர் பேசும் உரையைக் காஞ்சியிற் கேட்பதற்கோர் கருவி செய்வோம் என்பதன் மூலம் வளர்ந்து வரும் விஞ்ஞானப் புதுமையைக் கையேந்தி வரவேற்றார். சாதி மத இன வேறுபாடுகளையெல்லாம் தகர்த்தெறிந்து, "பாரதநாடு, பாருக்கெல்லாம் திலகம்; நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்” என்று பாடியதின் மூலம் தேசிய ஒருமைப் பாட்டுணர்வை வலியுறுத்தினார். பழம் நாகரிகத்தை - பண்பாட்டை அடித்தளமாக வைத்துக் கொண்டு, போற்றுதற்குரிய புதுமைகளைப் பாடினார் - எனவே புதுமைக் கவிஞர் பாரதி, புதுமையோடு புதுமையை இணைத்து - ஒட்டிப் பாடினார் என்று கூறுவதே சரியானது.

பாரதி காட்டும் வழி

பாரதியார் ஒரு மகாகவி. தமது உணர்ச்சியை வெளிப்படுத்துவதில் பேராற்றல் படைத்தவர். அவர் உள்ளத்தில் உள்ள உண்மை ஒளியே கவிதையாக மலர்கின்றது. அவர் பாடல்கள் தமிழர்களுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தன; கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தேசப்பற்றையும், தெய்வப் பற்றையும், கவிதை இன்பத்தையும் ஊட்டுகின்ற கவிஞர் அவர். பாரதியார் சிறந்த கவிதைத் தச்சர். ஒப்பற்ற சீர்திருத்தச் சிற்பி, அழுத்தமான தெய்வ பக்தர். வாய்மையும் நேர்மையும் பொருந்திய சமுதாயத்தின் வழிகாட்டி. சமுதாயத்தை வளப்படுத்த வந்த மாபெரும் தலைவராகிய பாரதியார் தலைவர்களாக உள்ளவர்களுக்கும் நல்ல வழிகாட்டுகிறார்.

பாரதத் தாயின் அடிமை நிலையினை அகற்ற முயன்ற முன்னையோரில் முதல்வர் தாதாபாய் நவுரோஜி அறிவும், திறனும், அன்பும் உறுதியும் படைத்த வீரத் தலைவர் அவர். விற்போரில் வெற்றி கொள்ள நினைப்பது பயனற்றது எனக்-