பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மனமுடையவர்கள் தமக்குத் தாமே விமர்சனம் செய்து கொள்ள ஒருப்படுவதில்லை.

மற்றவர்களுடைய விமர்சனத்தையும் ஏற்க மாட்டார்கள். மாறாக எரிச்சல் கொள்வார்கள். இத்தகையோர் சுகபோகங்களையே விரும்பி அலைபவர்கள். நல்ல நியதிகளுக்கு கட்டுப்பட்ட தூய மனமுடையவர்கள் தாங்கள் தங்களுடைய மனத்தை எதிரெதிராய் பார்த்துப் பக்குவப்படுத்தி அந்த மனத்தை ஞானத்திற்கு அடிப்படையாக்கி நல்ல காரியங்களில் ஈடுபடுத்துகிறார்கள். விவேகியானவன் தன் சத்துருக்கள் தன்னை வைது திட்டினாலும் மெளனமாகவே இருப்பான். வாயினால் மட்டும் அல்ல. மனத்தினாலும் மெளனமே சாதிப்பான். ஏன்? அவரவர்களுடைய உணர்ச்சிகளுக்கு ஏற்ப, குணங்களும் செயற்பாடுகளும் அமையும், வருந்தி என்ன பயன்?

இதற்கு எடுத்துக்காட்டாக வால்ட் விட்மன் தனது கவிதைகளை இகழ்ந்தவர்களைப் பற்றி, "அவர்களுடைய சுபாவத்திற்கு அதுதான் சரி” என்று சொன்னதை மேற்கோள் காட்டுகிறான் பாரதி.

ஞானியானவன் தன் கருத்தை, சரி என்றும், அதை உலகத்தவர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் சண்டை போட மாட்டான். வாக்குவர்தம், சண்டை, மனஸ்தாபம் இவைகளை உண்டுபண்ணும் சுபாவம் தன் சத்துருக்களோடு மட்டுமல்ல, சிநேகிதர்களையும் சத்துருக்களாகச் செய்து வருகிறது.

விவேகியோ தான் அன்போடு காட்டிய மெளனத்தால், சிநேகிதர்களின் வாத்சல்யத்தைப் பலப்படுத்துகிறதோடு விரோதிகளையும் சிநேகிதர்களாக்கிக் கொள்கிறான்.

இத்துறையில் வெற்றி பெற்று விளங்கியவர் சீன நாட்டுத் தத்துவ ஞானி கன்பூக்ஷியஸ். நமது நாட்டில் புத்த