பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மொழியினிடம் பற்றும் பக்தியும் பைத்தியமும் பிடித்தவனாக வாழ்ந்திருக்கிறான் எனலாம். ஆயினும் இவற்றை வைத்துக் கொண்டு மட்டும் பாரதியை எடை போட்டுவிட முடியாது.

வாழ்க்கையின் இயல்பும், அதில் தோன்றும் வெவ்வேறு ஆசைகளும் வளர்ச்சி நோக்குடையன. ஒரு குடும்பத்தில் தலைவனும் தலைவியுமாக இருவர் இருப்பினும் இருவரும் இருவேறு பண்புகளைப் பெற்றிருப்பினும், குடும்பம் என்றாகும்போது ஒருவர் மற்றவருடன்-இணைந்து வாழ்கின்றனர். பின் அவர்களே அண்டை அயல் வீட்டாருடன், அந்த ஊரிலுள்ள எல்லா குடும்பங்களுடன் ஒத்து இணைந்து வாழ்கின்றனர்- அதுதான் தலைசிறந்தது என்றும் எண்ணுகின்றனர். ஊரிலுள்ள குடும்பங்கள் அனைத்தும் நாட்டுக் குடும்பத்தில் இணைந்து ஒத்துக் கரைந்து போகின்றன. அது போல பாரதி தமிழ்க் கவிஞனாக வாழ்ந்தான். ஆனால் நாட்டைவிட்டு விலகி வேறாகி வாழவில்லை. நாட்டுடன் ஒட்டி வாழக் கற்றுக் கொண்டான். நான் தமிழனாகவும் வாழமுடியும். அந்த நிலையில் இந்த பாரத நாட்டுடன் ஒட்டி ஒரு பாரதக் குடிமகனாகவும் வாழமுடியும் என்பதை அவன் நடைமுறையில் காட்டினான்.

தனிமனிதன் தனித்துத் தன்னூருடன் மட்டும் வாழாது. நாட்டுடன் உலகுடன் ஒட்டிவாழ எண்ணும் போதுதான் பரிபூரண மனிதனாக-முழு வளர்ச்சியடைந்த மனிதனாகத் திகழ்கிறான். அவன் ஊருடன் நாட்டுடன் உலகுடன் ஒத்துவராதபோது அதனால் பயனில்லை. வளர்ச்சியும் இல்லை. ஆகவே பாரதி தமிழனாகப் பிறந்து தமிழனாக வாழ்ந்தான். ஆனாலும் தேசியம், நாடு என்றபோது இந்த நாட்டின் ஒரு குடிமகன் என்று வாழ்ந்திருக்கிறான். தனிமனித வரலாறு நாட்டு வரலாற்றைத் திருப்பியதாக வரலாறு இல்லை. தேசத்தின் பொதுத்தன்மைகளே தேசத்தின் வரலாற்றை மாற்றும்; செம்மைப்படுத்தும். ஆகவே தமிழனாக வாழ்ந்து பாரத நாட்டுடன் இணைந்து கலந்தவன் பாரதி,