பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் இலட்சியம்

273



"வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
'வாழிய பாரத மணித்திரு நாடு”

என்ற பாடலில் செந்தமிழையும் தமிழரையும் வாழ்த்திய பிறகுதான் பாரத நாட்டை வாழ்த்துகிறான். எனவே பாரதியார் மிகுதியும் வற்றுத்தியது தமிழ்த் தேசியமே என்றனர்.

பாரதி செந்தமிழை ஏற்றுக் கொண்டான். நற்றமிழை ஏற்றுக் கொண்டான். பாரத மணித்திரு நாட்டை ஏற்றுக் கொண்டான்-வாழ்த்துகிறான். அவன் தமிழ் பேசுபவனாகதமிழ் இனத்தவனாக இருப்பதுடன் பாரத நாட்டுக் குடிமகனாக இருப்பதிலும் பெருமை கொள்கிறான்-நாடு என்று வரும்போது பாரத நாட்டைக் காண்கிறான்.

அறையின்றி வீடு இல்லை. வீடு இன்றி வீதியில்லை; வீதியின்றி ஊரில்லை; அனைத்தும் ஒன்றையொன்று பிரிக்க முடியாது சாய்ந்து தழுவி நிற்கின்றன. பாரதம் என்ற நாட்டில் இருக்கின்ற வீதி தமிழகம், வீடு தமிழினம். வீட்டிலுள்ள சிறு அறை நாம் அறையின்றி வீடோ, வீடின்றி வீதியோ, வீதியின்றி ஊரோ இல்லை. அதுபோலத் தனித்தமிழன் இன்றித் தமிழினமோ, தமிழினமற்ற பாரதமோ இல்லை. எனவேதான் மொழி, மொழி வழிப்பட்ட இனம், நாடு என்று சொல்லும்போது தமிழ், தமிழர், பாரத நாடு என்று பேசுகின்றான்.

பாரதி தமிழினத்தைத் தமிழ்ச்சாதி என்று பேசுவதில் பெருமை கொள்கிறான். எனவே பாரதி வற்புறுத்தியது தமிழ்ச்சாதியின் சிறப்பையே என்றனர்.

உண்மைதான், பாரதி தமிழ்ச்சாதியைப் போற்றுகிறான்-புகழ்கின்றான்-செம்மாந்து பாடுகிறான். ஆனால் பாரத சமுதாயத்தை மறக்கவில்லை.

சாதி வேறு, சமுதாயம் வேறு. மாம்பழம் என்று சொல்லும்போது கிளிமூக்கு, மல்கோவா, ருமேனியா முதலிய