பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி வலியுறுத்துவது எது?

295



பழனிமலையிலே இறைவனைக் கோவணாண்டியாகத் துறவுக் கோலத்தில் காண்கின்றோம். இங்கு வருகி றோம். வாழ்த்துகிறோமே, வணங்குகிறோமே, அந்தந்த துறவுக் கோலத்திலிருந்து நாம் பெற வேண்டிய எளிய வாழ்க்கையும், தன்னலமின்மையும் நமது வாழ்க்கையில் கலந்திருக்கின்றனவா? இறையின் செயல் தோற்றம் நமது வாழ்வில் கலந்திருக்கிறது என்றால், அந்த எளிய தோற்றமும், தன்னலமில்லாப் பண்பும் அல்லவா நமது வாழ்வில் கலந்திருக்க வேண்டும்?

இறைவன் கூலியாளாக வந்து பிட்டுக்கு மண் சுமந்தான் என்றால் அதைப் பிட்டுத் திருநாளாக்கி நெய் பிட்டாக்கியல்லவா மகிழ்ச்சியடைகின்றோம். மண் சுமந்ததை மறந்து விடுகிறோமே. இறைவனின் செயல் தோற்றம் நம் வாழ்க்கையில் கலந்திருக்கிற தென்றால், இறைவனே வந்து மண் சுமக்கிறான் கொஞ்சம் பிட்டைக் கூலியாகப் பெற்றுக் கொண்டு-என்ற வரலாற்றை வைத்துக்கொண்டு, உழைப்பில் இழிவில்லை-எல்லோரும் உழைக்க வேண்டும். பதிலாகத் தேவையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற பண்பியல் பல்லவா வளர்ந்திருக்கவேண்டும். வளர்ந்திருக்கிறதா?

பாரதியார் தேசிய கீதம் பாடினார். மறுமலர்ச்சி பாடினார்-இறைமையைப் பாடினார். நம்மைப் பொறுத்த வரை இம்மூன்றுக்கும் அப்படியொன்றும் அதிகப்படியான வேறுபாடு இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. தேசீயம்நிலம்-மறுமலர்ச்சி-செயற்பாடு-பயன்-இறைமைத்தன்மை. எனவே எல்லாம் ஒரே வட்டம்தான். இதை முறையாகச் சொன்னவர் பாரதியார்.