பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இதுவரையில் பதில் இல்லை. இனிமேலும் கிடைக்காது ஏன்? இன்றும் செயல்முறையில் இறைமை இல்லை பிழைப்புத்தானே இருக்கிறது! இந்த நூற்றாண்டிலும் மானுடத்திற்குக் கருவறைக் கதவு திறக்கப்படாது போனால் வரலாறு பாடம் கற்பிக்கும். திருக்கோயில் கதவுகைளத் திறமின்! எல்லோரும் அர்ச்சகராவது அடுத்த கட்டம். முதலில் சாதிப் புன்மையினை ஒழிமின்! எல்லோரும் கருவறைக்குள் எழுந்தருளியுள்ள பெருமானுக்குப் பூவும் புனலும் இட்டுத் தொழ உரிமை வேண்டும். இதற்கு விடை கிடைக்குமா? கிடைக்காது?


"சாதி உயர்வென்றும் தனத்தால் உயர்வென்றும்
போதாக் குறைக்குப் பொதுத்தொழிலா ளர்சமூகம்
மெத்த இழிவென்றும் மிகுபெரும்பா லோரைஎல்லாம்
கத்தி முனைகாட்டிக் காலமெல்லாம் ஏய்த்துவரும்
பாவிகளைத் திருத்தப் பாவலனே நம்மிருவர்
ஆவிகளை யேனும் அர்ப்பணம் செய்வோம்”

(புரட்சிக்கவி-பக் 25 பாரதிதாசன் கவிதைகள் தொகுதி-)

என்று பாரதிதாசன் பாடுவதை ஒர்க. பாவேந்தன் தனது ஆவியைக் கொடுத்தேனும் சாதிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டான். கவிஞனுடைய ஆவிதான் போயிற்று. காரியம் நடந்தபாடில்லை.


மதங்களை ஏன் எதிர்த்தான்?

சாதிகளைச் சாடிய பாரதிதாசன், சமயங்களை மறுத்திருக்கிறான்; தொட்ட தொட்ட இடமெல்லாம் மூடப் பழக்கங்களை முழுமூச்சாகப் பாரதிதாசன் வெறுத்து ஒதுக்கியிருக்கிறான்; வெறுத்து ஒதுக்க, மக்களை அறைகூவி அழைக்கிறான். மக்களைச் சாதிகள் பெயரால், தலைவிதியின் பெயரால் ஒதுக்கிய சமய நெறிகளைப் பாவேந்தன் பாரதிதாசன் ஓரங்கட்டியதில் தவறில்லையென்றே தோன்று