பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

377


தான் நூற்றுக்கணக்கான உழைப்பாளிகளின் உழைப்பு, கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து சொத்து வடிவம் பெற்று மூலதனமாக வடிவம் பெற்றுக் குவிகிறது என்பதைப் புனல் நிறைந்த தொட்டி என்று எளிமையாக, அறிவில், உணர்வில் படும்படி கூறுகின்றான். உடைமைச் சமுதாயம், புனல் நிறைந்த தொட்டியான அதே நேரத்தில், "பொத்தல் இலைக் கலமானார் ஏழைமக்கள்” என்று கூறி மூலதனத்தால் தோன்றும் ஏழ்மையை உரைக்கும் அருமை உணரற்பாலது. "உடைமையைப் பொதுவாக்கு" என்றால் மக்களைப் பிச்சைக்காரர்களாக்குவது என்று சிலர் திரித்துக் கூறுகின்றனர். இங்கு உடைமை என்று கூறுவது செல்வ உற்பத்திக்களங்களையும் கருவிகளையுமே குறிக்கும். உற்பத்தி பொதுவில் நடக்கவேண்டும். எல்லாரும் அவரவர் சக்திக் கேற்ற உழைப்பினை மேற்கொள்ளவேண்டும். உளமார உழைப்பை மேற்கொள்ள வேண்டும். உழைப்பது உயர்வு என்ற எண்ணத்தில், உழைப்பது என்பது உயிர்க் குணமாக மாறவேண்டும். பண்டங்கள். - நுகர் பொருள்கள் செய்து குவிக்கப் பெறுதல் வேண்டும். எல்லாரும் அவரவர் தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே பொதுவுடைமைச் சமுதயாம்.

இத்தகைய பொதுவுடைமைச் சமுதாயம் இன்னமும் உலகில் எங்கனும் தோன்றவில்லை. பொதுவுடைமைச் சமுதாயப் பயணத்தின் இடையில் உள்ள சோஷலிச சமுதாய அமைப்பிலேயே சில நாடுகள் தங்கியுள்ளன. சோவியத்து, சீனா ஆகிய நாடுகள்கூட சோஷலிச நிலையிலேயே உள்ளன. வரலாற்றுலகம் ஈன்று தந்த நச்சுப் பழக்கங்கள் சோஷலிச சமுதாயத்தில் ஊடுருவி உள்ளிடழித்தன. அதாவது, உழைப்பை உயிர்க்குணமாக்கிக் கொள்ளாமை; உழைப்பைப் பயனிலாக் கொள்கைக்கு ஈடாக்கியமை; உழைப்பைச் சமுதாய உழைப்பாகக் கருதாமை; மாற்றாமை, உழைப்பு வேள்வியைவிட நிர்வாகம் பெரிதாவது போன்ற தீய-