பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

396

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அறிவியல்" என்று சிலபல இதழ்கள் வெளிவருகின்றன. இவை போதா! இந்த இதழ்களின் விற்பனையும் குறைவு; மக்களிடத்தில் அறிவியல், தொழில் நுட்பம் சார்ந்த செய்திகளைப் படிப்பதில் - கேட்பதில் ஆர்வம் இல்லை. ஆயினும், முயற்சிகள் தொடர்ந்து நடைபெறவேண்டும், நடைபெறும் என்று நம்புவோமாக!

தமிழன் கற்றுத் தெளிந்து வாழ்தல் வேண்டும். கல்வி பெறும் முயற்சியில் ஒருதமிழன் தாழ்ந்தானானால் தமிழர் அனைவரும் நாணித் தலைகுனிதல் வேண்டும் என்பது பாவேந்தனின் ஆணை. பாவேந்தனின் இந்த ஆர்வங்கள் நிறைவேறும் நாள் எந்நாள்? கவிதையைப் படியுங்கள்! திரும்பத் திரும்பப் படியுங்கள்! நாணம் இருக்கிறதா? இல்லையா? சோதனை செய்து கொள்ளுங்கள்!

எளியநடையில் தமிழ்நூல் இயற்றிடவும் வேண்டும்
இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்
வெளியுலகில் சிந்தனையில் புதிதுபுதி தாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெல்லாம் கண்டு
தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெல்லாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால்
இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்!

(பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி, பக்.95)


என்பதறிக.

தமிழைத் தாபிப்போம்!

அடுத்து, பாவேந்தன் தமிழருக்கு ஒருதலையாகச் செய்து முடிக்கவேண்டிய பணி ஒன்றை ஆணையிடுகின்றான்! இந்த உலகியல் விரிந்தது; பரந்தது. பூத, பெளதிக இயல்களை ஒட்டி எண்ணற்ற அறிவியல் துறைகள் தோன்றியுள்ளன; வளர்ந்துள்ளன. இத்துறைகள்