பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

399



திருக்கோயிலில் தமிழ்

காற்செருப்பு, வெளிப்புறத்தில் கழற்றி வைக்க வேண்டியதே! அத்தகைய காற்செருப்பை ஒருவன் கழிவிடத்தில் தள்ளிவிட்டால் நம்மால் தாங்கிக்கொள்ள முடிகிறதா? எவ்வளவு ஆத்திரப்படுகின்றோம்! இதே ஆத்திரம் ஏன் நமது உயிரினும் மேலாய தாய்மொழிக்கு இழிவு செய்யும்பொழுது வருவதில்லை! தமிழை மட்டுமா தாழ்த்தினார்கள்! தமிழனையும் சூத்திரன் என்று இரண்டாந் தரமாக்கிக் கருவறைக்கு வெளியே நிறுத்தினார்கள்! யார் கருவறைக்கு வெளியே? கற்கோயில் கட்டிய தமிழன்! இந்த இழிவு ஏன்? இறைவனை அர்ச்சனை செய்யத் தமிழுக்குத் தகுதியில்லையா? "அர்ச்சனை பாட்டேயாகும்" என்பது பொய்யுரையா? மெய்யுரையா? செந்தமிழ் மொழியில் தேவாரங்கள் உள்ளன. திருவாசகம் உள்ளது! இவை மொழிக்கு மொழி தித்திப்பானவை! இறைவன் விரும்பிக் காசு கொடுத்துக் கேட்டவை! தமிழ் கேட்கும் விருப்பத்தால் தமிழின் பின்னால் கடவுள் சென்ற வரலாறு, மறக்க முடியுமா? திருக்கோயில்களில் திருமுறைகளையே வழிபடும் மறைகளாக நடைமுறைப்படுத்தும் நாளே, தமிழர்க்கு நல்ல நாள்! இதோ பாவேந்தனின் உணர்ச்சி நிறைந்த கவிதைகளைப் படியுங்கள்! மானமும் உணர்ச்சியும் இருந்தால் தமிழகத் திருக்கோயில்களில் திருமுறைத் தமிழை வழிபாட்டு மொழியென்ற நியதியை உருவாக்குங்கள்! வரலாறு படையுங்கள்!

தமிழ் மக்களிடத்தில் தமிழ் என்ற உணர்வே இல்லை! கடவுள் பக்தி என்ற பெயரில் ஆசாரச் சடங்குகளுக்கே இரையாகிறார்கள்! ஞானத்தில் நாட்டமில்லை. நாம் தமிழகத் திருக்கோயில்களில் திருமுறைத் தமிழ் அர்ச்சனை வேண்டும் என்று பல்லாண்டுக்கு முன் போராடினோம். பல மேடைகளில் வற்புறுத்திப் பேசிவந்தோம். அப்போது தமிழக அறநிலையத்துறை அமைச்சராக இருந்த திரு. எம். பக்தவத்சலம் அவர்கள் இதற்கு உடன்படவில்லை.