பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



18


‘பட்டுக்கோட்டை’யின் பாடல்கள்

தமிழ், கவிதை மொழி - ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே கவிதை நலம் கண்டு போற்றிய நாடு தமிழ்நாடு. தமிழருக்கும், தமிழர் வாழ்வியலுக்கும் உணர்வும் உரமும் ஊட்டிய கவிஞர்கள் பலர் தோன்றிய நாடு இது. இன்றுவரை அந்தக் கவிஞர் பரம்பரை வளர்ந்து வாழ்ந்து வருவது தமிழகத்தின் சிறப்புக்களுள் ஒன்று. 20ஆம் நூற்றாண்டுத் தமிழகத்திலும், நல்ல பல கவிஞர்கள் தோன்றி வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவ்வாறு வாழ்ந்து வரலாறு முடித்த ஒரு சிறந்த கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம். இன்றையக் கவிதைகள் பெரும்பாலும் திரைப்படப் பாடல்களாகவே வெளிவருகின்றன. இது காலத்தின் விளைவு. திரைப்படம் பார்க்க விருப்பம் இல்லாதபோனாலும், இந்தப் பாடல்களைக் கேட்டு அனுபவிக்கவாவது திரைப்படங்கட்குச் செல்ல வேண்டும் என்று விருப்பம் தோன்றுகிறது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நஞ்சை கொழிக்கும் தஞ்சையைச் சார்ந்தவர். சமுதாயத்துறையில் முற்போக்குக் கருத்தினர். எளிய வாழ்வினர். முகமன் கூறாமல் உள்ளதைச் சொல்லுபவர். வளங்கள் பலவற்றைச் சுவைத்தறியாதவர்.