பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அதனால் பாரதி, இந்தியாவைக் கிருதயுகத்தின் சின்னமாக ஒரு குடும்பமாக்கினான். கலியுகத்தில் “வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள் என்றால் சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்” என்று சொன்னானே பாரதிதாசன் அந்தப் பேதங்களின் பெயர்கூட இல்லாமல் சாகடிக்கின்றான்.

"எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில்
யாவர்க்கும் அந்த நிலை பொதுவாகும்;
முப்பது கோடியும் வாழ்வோம்,-வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்!
(வந்தே மாதரம்-5)

என்பது பாரதியின் முழக்கம்.

பாரதி, சமுதாயத்தை நச்சுத் தன்மைக்கு ஆளாக்கிய கலியுகத்தின் படைப்பாகிய தனி உடைமைக் குணத்தை மாற்றுகின்றான். முதன் முதலில் தமிழ் மக்களுக்கு - இந்திய நாட்டு - மக்களுக்குப் பொதுவுடைமைத் தத்துவத்தை அறிமுகப்படுத்துகின்றான். இந்திய சமுதாயத்தை ஒரே பொது வுடைமைச் சங்கமாக அமைக்கின்றான். பாரத சமுதாயம், பொதுவுடைமைச் சமுதாயமாக உருமாற்றம் பெறுதலை,

"முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொதுவுடைமை;
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை”

என்றும் பாராட்டுகின்றான்.

பாரதி, பொதுவுடைமைச் சமுதாயம் அமைவதைத் தான் கிருதயுகம் என்று கூறுகின்றான். பாரதி, சோவியத் புரட்சியை வரவேற்கின்றான்; பாராட்டுகின்றான்; சோவியத் புரட்சி, மாகாளி பராசக்தியின் கடைக்கண் அருளால் நிகழ்ந்ததென்கின்றான், கலிவீழ்ந்தால் கிருதயுகம் பிறப்பது