பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தலைகளின் எண்ணிக்கை மிகுதி மட்டும் மக்களாட்சி முறையின் அளவுகோலன்று. ஒரு சராசரிக் குடிமகனின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதே பொதுவுடைமையாகும்: குடிமை நீதியுமாகும். இதனை பாரதி,

"குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றில் எழுந்ததுபார்; குடியரசென்(று)
உலகறியக் கூறி விட்டார்;
அடிமைக்குத் தளையில்லை; யாருமிப்போ(து)
அடிமையில்லை அறிக என்றார்:
இடிபட்ட சுவர்போலே கலிவிழுந்தான்
கிருதயுகம் எழுக மாதோ! (புதிய ருஷியா-6)

என்று பாடுகின்றான்.

பாரதி, பொதுவுடைமைச் சித்தாந்தத்தை எளிதில் விளக்குகின்றான். பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் அடிப் படை, உழைப்பை மதிப்பது; உழைப்பாளியை மதிப்பது. பாரதி, இத்துறையில் மிக மிக வளர்ந்து விளங்குகின்றான்.

"கைவருந்தி உழைப்பவர் தெய்வம்" என்று உழைப்பாளியைப் பாராட்டுகின்றான் பாரதி. உழைக்கும் உலகம் மெருகேற, வாழ்க்கை சிறக்கும். வாழ்க்கை சிறக்க, உழைக்கும் உலகம் சிறக்க வேண்டும். கலியுகம், எல்லா வற்றையும் பொய் என்னும்; மாயை என்னும். வயிற்றைச் சுருக்குதலும், பரதேசிகள் ஆவதும் தான் வாழ்க்கையின் இலக்கணம் என்பது கலியுகத் தத்துவம். பாரதி, இந்தப் பொய்ம்மையான மாயா தத்துவத்தைச் சாடுகின்றான். புலன்கள் ஆரத் துய்க்கும் வாழ்க்கை பெருகி வளராது போனால், தொழில் வளராது. தொழில் வளராது போனால், மகிழ்ச்சி இல்லை! துன்பம்தான்! எனவே பாரதி, பொதுவுடைமைச் சமுதாயத் தோற்றத்திற்கு இன்றியமையாத தொழிற் புரட்சியைத் தமிழ் இலக்கிய உலகில் முதன் முதலாக