பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

47


துணிவுமுடைய நெஞ்சினரை விரும்புகின்றான். ஆனால், கலியுகம் அப்படியில்லை. மெய்ம்மைக் குணம் இல்லாத வராய், பேதங்கள் பல கற்பித்து எளிதிற் பகை வளர்த்து நாட்டைப் பாழடித்துக் கொண்டிருந்தனர். உள்ளத்திலும் சமூகத்திலும் பரவிக்கிடந்த நோய்களுக்கேற்ப உடலிலும் நோய், உடல் நோயின் காரணமாகத் துன்புற்றனர். கல்லைத் தின்று செரிக்க வேண்டிய காலத்தில்கூட எதைச் சாப்பிடலாம்? இதைச் சாப்பிடலாமா? வேண்டாமா? என்றெல்லாம் ஆய்வு செய்யக்கூடிய பரிதாப நிலைக்கு ஆளாயினர், காற்றோடு கலந்து விண்ணேறிச் சாடும் திறன் வேண்டியவர்கள் காற்றைக் கண்டாலே காத தூரத்தில் ஓடி ஒதுங்கி வாழும் நிலையினராயினர். இது பாரதிக்கு கட்டோடு பிடிக்கவில்லை. கலியுகத்தின் பழைய பாரதத்தைப் 'போ, போ' என்று வெறுத்து ஒதுக்கித் தள்ளுகின்றான். அதே போல், கிருதயுகத்தின் புதிய பாரதத்தைக் கட்டியம் கூறி வரவேற்கின்றான். பாரதி, புதிய பாரதத்தை வரவேற்கும் பாடல் இதோ!

"மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு
வேத மென்று போற்றுவாய் வாவாவா
பொய்ம்மை கூற லஞ்சுவாய் வாவாவா
பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வாவாவா
நோய்ம்மை யற்ற சிந்தையாய் வாவாவா
நோய்க ளற்ற உடலினாய் வாவாவா
தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த்
தேசமீது தோன்றுவாய் வாவாவா!
(போகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும்-6)

கலியுகத்தில் மிகமிக மோசமான அழுகும் மலத்தில் கிடந்து நெளியும் புழுக்களைப்போல மக்கள் வாழ்கின்றனர். அவர்களை நாள்தோறும் தின்று அழிக்கும் துன்பம் ஒன்றல்ல, இரண்டல்ல. வஞ்சகரும் சூதரும் வாழ்க்கையைச் சூறை