பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பர் விருந்து
163
 

திருக்கோயில் எழுப்பச் செய்திருந்தால் கோயிலையும், கோயில் சொத்தையும் பேணுகிற உணர்ச்சி அந்த மக்களுக்கு இருக்கும். இப்படி நாம் கூறும்போது அந்தக் கோயில்களையும் மக்கள்தாமே கட்டினார்கள்? மன்னனா கட்டினான்? என்று நீங்கள் கேட்கலாம். மக்கள் தாம் கட்டினார்கள். ஆனால் கூலிக்குக் கட்டினார்கள்; அரசனின் ஆணைக்குக் கட்டுப்பட்டுக் கட்டினார்கள். அவ்வாறின்றி, மக்களாகவே கட்டியிருந்தால் இந்த நாட்டில் பாடல்பெற்ற திருத்தலங்கள் பல அழிந்திருக்குமா? அந்தத் திருக்கோயில்களில் செடி, கொடிகள் முளைக்கமுடியுமா? இன்று பல கோயில்களின் சொத்து ஒரு சில மனிதர்களின் சுக போகத்திற்குப் போயிருக்குமா? இவையெல்லாம், தங்கள் சொத்து என்ற உணர்ச்சி மக்களிடம் இல்லாமற் போனதால் விளைந்த தீமைகள். இன்னொன்று, கோயில் எழுப்பியதோடு மட்டுமின்றி அவற்றிற்குச் சொத்தும் கொடுத்தது. இதுவும் ஒரு பெரிய குறைதான்.

பொது நிறுவனங்கள் மக்களாலேயே பாதுகாக்கப் பெறவேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார். அவை மக்களாலேயே பாதுகாக்கப் பெறுகிற அளவிற்கு மக்களிடமிருந்தே வருவாய் வரவேண்டும். அவ்வாறின்றி, ஒரு பெரும் மூலதனம் இருந்துவிடுமானால் பணம் வருகிறது, எப்படியும் காரியத்தை நிறைவேற்றிவிடலாம் - மக்களைப் பற்றி நமக்கென்ன என்ற எண்ணம் எழக்கூடும். நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டு நமது மதத்தைச் சார்ந்த மக்கள் பலர் பிற மதத்திற்குப் போயும்கூட, பலர் ஐந்தெழுத்தின் மெய்ப்பொருளை எண்ணிப் பார்க்க முடியாமல் போயும் கூட, நமது சமய மடங்களும், திருக்கோயில்களும் சிறிதும் கவலைப்படாமல் தங்களுடைய மணிகளை முழங்கிக் கொண்டு காலங்கடத்தி வருகின்றன. இதனாலேயே நமது திருக்கோயில்களுக்கும், மக்களுக்குமிடையே - நமது திருமடங்களுக்கும் மக்களுக்குமிடையே நீண்டதோர் இடைவெளி ஏற்பட்டது; இன்றும் இடைவெளி இருந்து வருகிறது.