பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/241

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பர் விருந்து
237
 

மயமான மன்றத்தில் இன்பக் கூத்தாடும். இறைவனை - ஆடலரசை - தில்லைக்கூத்தனை நினந்து நினைந்து வழிபாடு செய்தால் வினைகளின் அரிப்பிலிருந்து விடுதலை பெறலாம் என்று நம்மீதுள்ள இரக்கத்தின் காரணமாக அப்பரடிகள் வழி நடந்துகின்றார்.

அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தீரென் றயலவர்
சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே!

என்பது அப்பர் திருப்பாட்டு.

20. இறைவன் தங்கும் இடம்

நமது சமயநெறி இனிய நெறி; எளிய நெறி; "இது”, “அது” என்ற பிரிவினைச் சழக்குகளைக் கடந்த பெருநெறி. நமது சமயநெறியில் இறைவனை எப்படியும் தொழலாம்; எந்தப் பெயராலும் அழைக்கலாம்; எங்கும் தொழலாம். இங்ஙனம் அமைந்த ஒரு சன்மார்க்க நெறியை உலகில் வேறெங்கும் காண முடியாது, இறைவன் உருவமுடையவனல்லன்; ஆயினும், உருவமுடையான். அவனை ஆலயங்களிலும் வழிபடலாம்; அவரவர் அகத்திலும் வழிபடலாம். இறைவன் என்ற சொல்லுக்கே பொருள், எல்லா உயிர்களிடத்திலும் தங்கியிருப்பவன் என்பதே. இறைவன், விரும்பி எழுந்தருளும் திருக்கோயில், உயிர்களின் நெஞ்சமேயாகும். “இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” என்றார் மாணிக்கவாசகர்.

             நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்
                     நினையாது ஒருபோதும் இருந்தறியேன்