பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அப்பரடிகள் தற்சார்பான ஆசைகளினின்று நீங்கியவர். ஆயினும் சமுதாய நல ஆர்வலர், சமுதாயத்தில் நிலவிய பல்வேறு தீமைகளைக் கடிந்து ஒதுக்குகின்றார். அந்தத் தீமைகளை, பொய்ம்மைகளைப் பாதுகாக்கப் போராடிய பழைய பஞ்சாங்கங்களை எதிர்த்துப் போராடுகின்றார். இந்தப் போராட்டத்தில் அவர் யாருடைய தயவையும் உதவியையும் எதிர்பார்க்கவில்லை. தந்தாலும் ஏற்கத் தயாராக இல்லை. தீண்டாமை, சாதி வேற்றுமை முதலிய தீமைகளுடன், அத் தீமைகளை அனுட்டிப்பார்களிடம் அப்பரடிகள் எந்தவிதச் சமாதானமும் செய்து கொள்ள விரும்பவில்லை. மிகமிகக் கண்டிப்பாகவே தீண்டாமையையும், சாதி வேற்றுமையையும் எதிர்த்தார். இன்றுகூட நாம் அப்பரடிகளைப் போல் தீண்டாமை, சாதி வேற்றுமைகளை எதிர்க்க விரும்பவில்லை; துணிவில்லை. அரசியல் இயக்கங்கள் சொல்வது தீண்டாமை ஒழிப்பு! சாதி வேற்றுமைகளற்ற சமுதாயம்! ஆனால், நடைமுறையில் அவர்கள் தீண்டாமை, சாதிவேற்றுமைகளால் பிரிவுபட்டுக் கிடக்கும் சமுதாய அமைப்பையே விரும்புகின்றனர் என்பது அவர்களுடைய செயல்முறைகளினின்றும் நாடறியும் உண்மை. அப்பரடிகளை அவர் காலத்துச் சமுதாயப் பழைமை வாதிகள் சங்கநிதி, பதுமநிதி முதலியவற்றைக் கொடுத்துத் தீண்டாமையை எதிர்த்துப் பேசவேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றனர். அப்பரடிகள் அவற்றைத் துச்சமெனக் கருதி ஆர்ப்பரித்துச் சமூகத் தீமையை எதிர்த்தார். மீண்டும் பழைமைவாதிகள் நிலம், ஆட்சி முதலியவற்றை அப்பரடிகளுக்கு வழங்குவது என்று பேரம் பேசுகின்றனர். அப்பரடிகளோ தீண்டாமை விலக்குவதில், சாதி வேற்றுமையை அகற்றுவதில் தயவு தாட்சண்யம் இல்லாமல் போராடுகின்றனர். ஏன்? தீண்டாமையை, சாதிகளை ஏற்க மறுக்கிறார்.