பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/304

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
300
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

துணரத் தக்கது. ஒரு பக்தன் திருக்கோயிலில் திருவலகு செய்வது திருத்தொண்டு. அதே பக்தன் செய்திக்கும் படத்துக்குமாக அதனைச் செய்யின் திருத்தொண்டல்ல. கடன் என்ற உணர்ச்சியில் மட்டுமே அது செய்யப்பெறின் கடமையாகும். கூலியுணர்வில் செய்யப்படும் பொழுது அது வேலையென்று சொல்லப்பெறும். பணி என்பது எல்லாவற்றிலும் உயர்ந்தது. முனைப்பின்றிப் பணிந்து செய்யப்பெறுவது பணி. முனைப்பில்லாததால் அங்கு “யானும்” இல்லை; “என்னும்” இல்லை. “நான்”, “எனது” என்ற உணர்வு அற்றதால் பணியின் பயன் பற்றிய சிந்தனை இல்லை. அச் சிந்தனையின்மையால் உயர்திணையேயானாலும் - முனைப்பும், பற்றும் இல்லாத காரணத்தால் - அஃறிணை போலக் கூறப்பெறுகிறது. பழுத்தமனத்து அடியார்கள்-சீவன் முக்தர்கள் என அழைக்கப்படுதல் மரபு.

அப்பரடிகள், திருவவதாரத்தால் திருத்தொண்டின் நெறி வளர்ந்தது. அப்பரடிகளின் நெஞ்சம், இறைவன் திருவடிகளினின்று நீங்கியதே இல்லை. அப்பரடிகளின் திருக்கரங்கள் ஒருபோதும் உழவாரப் படையினை நெகிழவிட்டதில்லை. தமிழகத் திருக்கோயில்களைக் (ஏழாம் நூற்றாண்டில்) காக்கும் பணியென்று உழவாரப்பணியையே அப்பரடிகள் நம்பினார். ஆம்; இன்று தமிழகத்தின் சிற்றுார்களில் பல திருக்கோயில்கள் இடிந்து கொண்டிருக்கின்றன. ஏன்? காலத்தின் கோலமா? இல்லை, இல்லை; திருக்கோயிலின் மதில்களில்-தளங்களில் செடி கொடிகள் முளைக்கின்றன.

அவைகளை உடனுக்குடன் உழவாரப்படை கொண்டு அப்புறப்படுத்தாவிடில் செடிகள் மரங்களாகிக் கோயில்களை இடிக்கின்றன. இதனை அறிந்த அப்பரடிகள் உழவாரப் படை கொண்டு திருக்கோயில்களில் செடி கொடிகளை நீக்கும் திருத்தொண்டைச் செய்தார். இந்தப் பணியை மீண்டும் தமிழகம் முழுவதும் சமய நம்பிக்கை உடையோர் செய்ய