பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/310

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
306
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

இடம். நம்முடைய இறைவன் மன்றிலாடுகின்றான். மன்றத்தையே 'பொதுவில்' என்றும் அழைப்பதுண்டு. மன்றத்திலாடும் இறைவன் என்றால், இறைவன் உலகுக்குப் பொது என்பது பொருள். உலகத்தின் முதல் பொதுவுடைமைத் தலைவன் இறைவனே. அவன் மகிழ்ந்தாடிய இடம், மன்றம். அந்த ஆனந்த வெள்ளத்தமுதில் திளைப்பவர்கள் உலகத்து மக்கள். இங்ஙனம் பொதுமைக் கரு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகச் சமய நெறியில் கால்கொண்டுவிட்டது. ஆயினும் பழக்கங்கள் அக் கருவை மூடிமறைத்துச் சிதைத்துவிட்டன.

மன்றம் பலர் கூடுமிடம். ஆங்கு, நிழல் தருவதற்கான மரங்கள் தோன்றி இடர்களைக் களைந்து வளர்ந்திருக்கும். நிழலில் கூடியிருந்து மகிழ்ந்தவர்கள், நிழல் தந்த மரங்களைப் பேணுவதில்லை; பேணாதது மட்டுமன்றித் தேவைக்கேற்பச் சிறிதும் பெரிதுமான கொம்புகளை ஒடித்துச் சேதப் படுத்துவர். தொங்கும் கிளைகளை மாடுகளும் கடித்து மேய்ந்து அழிக்கும். நோய் தரும் பூச்சிகள் ஒட்டி மரங்களை உருக்குலைக்கும். இங்ஙனம் மன்றத்தில் நின்ற மரமாயினும் - மன்பதைக்குப் பயன்படுவதாயினும், அம்மரம் பேணுவாரின்றிப் பெருந்துன்பமே உறுகின்றது. காரணம் மன்றத்தில் நின்ற மரம்! வீட்டருகே நின்ற மரமாக இருப்பின் நன்கணம் பேணுவர் என எடுத்துக் கூறவும் வேண்டுமோ?

“தாம் வளர்த்ததாக இருப்பின், நச்சு மரமேயானாலும் கொல்லமாட்டார்கள்” என்று மணிமொழி பேசுகிறது. வளர்த்த பாசம் அத்தகையது. மன்றத்தில் நிற்கும் மரமும், பொது இடத்தில் நிற்கும் மரமும், படும் துன்பத்தைத் துன்பத்திற்கு எல்லையாக எடுத்துக் காட்டுகின்றார் அப்பரடிகள். ஆதலால் அப்பரடிகள் காலத்தும் பொதுமை உணர்வு தோன்றவில்லை; பொதுவுரிமைப் பொருள்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற உணர்வும் வளரவில்லை.