பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/397

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுந்தரர்
393
 


சுந்தரர் கண்களை இழந்த நிலையில் மற்றவர் வழிகாட்டிச் செல்லும் தன் நிலையை, “கழித்தலைப்பட்ட நாயது போல” என்று கூறி விளக்குகின்றார். ஒருவன் நாயைக் கழியைக் காட்டி இழுத்துச் செல்லுதல் போல் தன்னையும் இழுத்துப் போவதாகக் கூறும் செய்தி உணர்வைத் தொடுகிறது; அழுகையை வரவழைக்கிறது.

அடுத்து, ஒரு சிறந்த உவமை, “வாழை தான் பழுக்கும் நமக்கென்று” என்பது. மானுட வாழ்க்கையில் இளமை நலம் பொருந்திய மகளிர் இன்பம் தருவர். அந்த இளைய மகளிர் என்றும் இன்பந்தருவர் என்று கருதுவது ஒருவகையான மயக்கம்.

ஒரு தடவை பழம் தந்த வாழை மீண்டும் தராது. அதுபோலத்தான் மகளிரும் தொடர்ந்து இன்பந்தர இயலாது என்று வாழையையும் இளைய மகளிரையும் உவமிக்கிறார்.

2. பழமொழிகள்

சுந்தரர் தமது பாடல்களில் பழமொழிகளை வைத்தும் பாடியுள்ளார். சுந்தரர் திருமுறையில் பயிலும் பழமொழிகள் பலகாலும் சிந்திக்கத் தக்கன.

நரியார்தங் கள்ளத்தாற் பக்கான பரி
சொழிந்து நாளும் உள்கித்....
திரியாத அன்பராய்ச் சென்றுமுன் னடி வீழும்
சிந்தை யாரைத்
தரியாது தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
பெரியோர்கள் புலியூர்ச்சிற் றம்பலத்துஎம் பெருமானைப்
பெற்றா மன்றே!

(7.90.3)

இந்தப் பாடலில் நரியின் வஞ்சனை எடுத்துக் காட்டப் படுகிறது. வஞ்சனையைக் கள்ளம் என்று குறிப்பிடுகிறார். இரண்டுபட்ட தன்மைக்குக் கள்ளம் என்று பெயர். அதாவது,