பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தெய்வம் பேனார் தெளிவு
65
 

போனால் அறிவு நலத்திற்குப் பதில் அறியாமையும் குழப்பமும்கூட மிகலாம். சுவைபார்த்து உண்பதைப் போலச் சுவை பார்த்துக் கேட்கவேண்டும் என்பது வள்ளுவர் கருத்து. கற்றலும் கேட்டலும், சாதாரணமானவர்கள் பணியல்ல. மாணவர்கள் கடமை மட்டுமல்ல. பெரியவர்களும் செய்ய வேண்டிய கடமை என்பதனைத் திருஞானசம்பந்தர், “கற்றல் கேட்டலுடையார் பெரியார்” என்று பாராட்டுவார். இங்ஙனம் முத்திறத்தாலும் பெறும் அறிவு, ஒரு சிறு கூறேயாம்.

அடுத்து, அறிவைப் பெருக்கி வளர்த்துக்கொள்ளும் நெறி, பெற்ற அந்தச் சிறு கூறாகிய அறிவை வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுதலாகும். சிந்தனை, அறிவைப் பெறும் வாயிலே தவிர சிந்தனையே அறிவன்று. கல்வி, அறிவைப் பெறும் வாயிலே தவிர, கல்வியே அறிவன்று. இம் மூன்றினாலும் பெற்ற செய்தியை - கருத்தை அறிவாக்கி உயிர்க்குத் தரவல்லது வாழும் முறையேயாம். அறிவியற் கூடத்துச் சோதனைகளில் விஞ்ஞான அறிவு கிடைப்பதைப் போல வாழ்க்கைச் சோதனைகளில் அறிவு கிடைக்கிறது. சோதனைக்கு ஆட்படவும், வாழ்க்கையைச் சோதனைக்கு ஆளாக்கவும் திறமை தேவை. கோழை, ஒரு பொழுதும் அறிவுடையவனாக முடியாது. இங்ஙனம், வாழ்க்கை அனுபவத்தின் மூலம், அறிவு முழுமை நலம் பெறுதற்குரிய தகுதியை எய்துகிறது. ஆனாலும் முழுமை அடைந்து விடுவதில்லை. அறிவு நலம் முழுமையடைய அல்லது முழுமை அடைந்தது என்பதை அறிந்துகொள்ளத் துணை செய்வது இறைவழிபாடேயாம். காரணம், ஒரு முழுமை, மற்றொரு முழுமையை நாடுதல் - கவர்ச்சிக்கப்படுதல் - ஒன்றோடொன்று கலத்தல் உலகியலின் நியதி; இயற்கை. இறைவன் முழுநிறை அறிவினன்; வாலறிவன். ஆதலால், அறிவு நலம் பெற்ற உயிர், மேலும் முழுமை நலம் எய்த, வழிபாடு துணை நிற்கிறது. மேலும், தெளிவாகச் சொன்னால் இந்த நிலை எய்திய உயிர்கள் செய்யும் வழிபாடே வழிபாடு.

கு.இ.VII.5.