பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசக உவமைகள்

239


வாழ்க்கை கிடைத்தது. ஆனாலும், கவனக் குறைவின் காரணமாகவும் கருத்து இன்மையாலும் உயிர் இன்புறுதலுக்குப் பதிலாக ஆராத் துயரில் ஆழ்கிறது. இதற்குக் காரணம் பொறிபுலன்களோடு கூடிய வாழ்வியல் நடத்தும் உயிரிடத்தில் ஆசையென்ற பொந்து விழுந்து விடுகிறது “ஆசை மோசம்” என்பது அனுபவ மொழி.

“ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்”

என்கிறது திருமந்திரம். தமிழ்மறை தந்த திருவள்ளுவரும் “மேன்மேலும் துன்பச் சார்புடைய பிறப்பை விளைக்கும் வித்து ஆசையே” என்கின்றார். மாணிக்கவாசகரும் “அவா வெள்ளக் கள்வனேனை” என்று குறிப்பிடுகின்றார். ஆதலால், உயிரியல் நல்வாழ்க்கையைக் கெடுக்கும் பொந்து ஆசையேயாகும். இங்கு ஆசை என்று குறிப்பிடும்பொழுது, இறைவனாலேயே வழங்கியருளப் பெறுகின்ற பொன், பொருள், போகத்தை விரும்புவதா கூடாதா என்ற வினா எழும். தேவையை விரும்புதல் ஆசையென்று சொல்லப் பெறுவதில்லை. மாணிக்கவாசகரும், “வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ” என்று குறிப்பிடுவது சிந்தித்து உணரத் தக்கது. தகுதியில்லாத ஒன்றினை விரும்புதல் ஆசை. அதுமட்டுமல்ல, சாதனத்தையே சாத்தியமாகக் கருதிக் காமுறுதலும் ஆசையே. உதாரணமாகப் பொருள்களைப் பெற்றுத் துய்த்து வாழப் பொன் தேவை. அந்த அளவிற்குப் பொன்னை விரும்புதல் பிழையன்று. அளவிற்கு மேலாகத் துய்க்கவும், அத்தோடு தானும் துய்க்காமல் பிறரையும் துய்க்கச் செய்யாமல் பொன் காக்கும் பூதமாக வாழ்தலும் ஆசையின் பாற்பட்ட வாழ்க்கை. கடுங்கோடை-மண் சுடுகிறது-அந்த நேரத்தில் காலில் அணிந்து கொள்ளும் செருப்பைப் பெற்ற ஒருவன், செருப்பைக் கையில் தூக்கிக்கொண்டு சுடுமணலில் நடந்து துயர்ப்படு