பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணிக்கவாசகர்

19



ஆதலால் அரசன், அமைச்சர் திருவாதவூரரை நோக்கி வேண்டிய பொருள் எடுத்துக்கொண்டு சென்று குதிரைகள் வாங்கி வரும்படி பணித்தான். திருவாதவூரரும் பயணமானார். திருவாதவூரர் குதிரைகள் வாங்கப் பொருள் எடுத்துக்கொண்டு பயணம் செய்த பொழுதே கையில் உள்ள பொருள் இறைபணிக்கும் சிவனடியார்களின் பணிக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று இறைவனிடம் விண்ணப்பிக்கின்றார்.

ஆதி சைவனாம் அருச்சகன் ஒருவன் நேர் வந்து திருநீறு வழங்கியருள்கின்றனன். திருவாதவூரர் இதனை நன்னிமித்தம் என்று எண்ணிப் பயணத்தைத் தொடர்கின்றார். திருப்பெருந்துறையை அணுகுகின்றார், திருவாதவூரர்.

இறைவனும் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் எழுந்தருளித் திருவாதவூரரைப் பணி கொண்டருளக் காத்திருந்தனன், திருவாதவூரரும் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் எழுந்தருளியிருந்த, கருணையே உருவெனக் கொண்ட மூர்த்தியைக் கண்டார்; தொழுதார்; அருள் வசத்தரானார்.

குருந்த மரத்தடியில் எழுந்தருளியிருந்த நாயகன், திருக்கண் நோக்கால் திருவாதவூரரின் ஆன்மாவைப் பந்தித் திருந்த ஆணவ மலத்தைக் கழுவினான்; திருவடிகளைச் சூட்டித் தீட்சை செய்தான். திருவாதவூரர்க்குத் திருவைந் தெழுத்து ஓதிக் - கொடுத்தான். திருவாதவூரர் தன்னை மறந்தார்; தலைவன் தாள் நினைந்துருகினார்.

பழுதிலாத சொற்களினால் பக்திப் பாடல்களைப் பாடினார்; ஈசன் திருவடிகளையும் அவன் ஆட்கொண்டருளிய பாங்கினையும் நினைந்து நினைந்து அழுது அழுது பாடினார். திருப்பெருந்துறை ஈசன் திருவாதவூரர் பாடல்களைக் கேட்டு உவந்து “மாணிக்கவாசகர்” என்றழைத்தார்.