பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொழுதே கடவுட்காட்சி நிகழும். உடம்பினால், மனத்தினால் செய்யும் பணிகள் முதிர்ந்து அறிவுத் தொழிலே தலைமை தாங்கும் நிலையில் ஞானம் முகிழ்க்கிறது; எதுபோல் எனில், அரும்பு, மலர், காய், கனி போல! அறிவு - அறியாமைக் கலப்பற்ற அறிவு. அறிவு, சிவத்தை அறியும் அறிவு வளர, வளர அறியாமை-ஆணவமலத்தின் ஆற்றல் ஒடுங்கும். அப்போது இறைவன் ஞானத்தை அருளுவான். ஞானமே சிவத்தை அனுபவிக்கும் பேற்றினையும் தரும்; இன்ப அன்பினையும் நல்கும்;

இன்று பத்திமை மேவியுள்ள அளவுக்கு, ஞானத்தில் ஆர்வம் இல்லை; வேட்கை இல்லை! ஞானம் பெறுதலுக்குரிய சிவபூசை முதலியன பண்ணும் ஆர்வம் அகப்பூசை செய்யும் மரபு மறந்தேபோய் விட்டது. பூசலார் அகப் பூசையில் தோய்ந்தவர் இல்லை! ஞான நூல்களை கேட்கும் ஆர்வம் இல்லை. ஞான நூல்களை ஓதும் ஆர்வம் இல்லை. இதனாலேயே சமய ஆசாரங்கள், சடங்குகள் பெருகி வளர்ந்து கூட ஆன்மாவின் தரம் உயரவில்லை; ஆணவம் வேறு வேறு வடிவத்தில் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இன்று எங்கு நோக்கினும் ஆணவத்தின் போக்கே காணப்படுகிறது. இறைவன் சந்நிதியிலேயேகூட ஆணவம் ஆட்சி செய்கிறது. சமயசீலம் அருகி வருகிறது. தாழ்வு மனப்பான்மை யாரிடமும் இல்லை! விருப்பும், வெறுப்பும் மனித உலகத்தை ஆட்டிப் படைக்கின்றன.

இந்தத் துன்பத்திலிருந்து மாந்தர் உலகம் மீள உள்ள ஒரே வழி, ஆன்மாவின் ஆணவத்தைக் கரைத்துக் கரைத்துக் கெடுக்கும் திருவாசகத்தை ஓதுதல்; திருவாசகமே நமக்கு ஞானாசிரியன்! திருவாசகம் நமக்குத் துணை! திருவாசகம் நம்மை வளர்க்கும்! திருவாசகம் ஞானம் நல்கும்; ஏன்? திருவாசகத்தின் வழி மாணிக்கவாசகர் கண்ட காட்சியை அனுபவித்தால் இறைவன் திருவடிகளைப் பற்றலாம்!