பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

333


ஓவாள்!” என்றதால் வாயும், “சித்தம் களிகூர” என்றதால் மனமும், “பாரொருகால் வந்தனையாள்” என்றதால் மெய்யும் வழிபாட்டில் ஈடுபடும் நிலை விளக்கப்படுகிறது. இப்பாடலில் முத்த நிலையடைந்த பெண்ணின் கண்கள் ஆனந்த அருவிக் கண்ணீரிலே மூழ்கி ஆடுகின்றன. அவள் தம் திருவுடல் பொய்கை நீரிலே மகிழ்ந்து ஆடுகிறது. இவ்விரு நிலையும் ஒருசேரப் பெற்றார், மண்ணிற் பிறந்த பயன் எய்துதல் எளிது. ஆதலால், இறைவன் திருப்புகழை நாமும் வாயாரப் பாடிச் சிந்தையால் நினைந்து, உடலால் வணங்கி உய்தி பெறுவோமாக!

முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை யாளுடையா ளிட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை யாளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமா னன்பர்க்கு
முன்னி யவன் நமக்கு முன்சுரக்கு மின்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.

16

இத்திருப்பாட்டில் அம்மையின் அருளைப்போல மழை பொழிக! என்று வேண்டப்படுகிறது. பாவை நோன்பிற்கு உறுப்பு, மழை; பாவை நோன்பின் பயன் மாமழை; திருவருள் மாமழை; மேகமே! நீ, இக்கடல் நீரைக் குடித்து எம் அன்னையைப் போல நீல நிறம் பெற்று விளங்குக! நமையாளும் தேவியின் இடையைப் போல மின்னுக! தாயின் சிலம்பைப்போல ஒலித்திடுக! அன்னையின் அழகிய திருப்புருவம் போல வானவில் காட்டுக! இங்ஙனம் நீ விளங்கி எமை ஆளுடைய தலைவனை என்றும் பிரியாத பேரருட்சக்தியின் அருளைப்போல மழையைப் பொழிந்திடுக! என்று வேண்டப்படுகிறது.