பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணிக்கவாசகர்

23


தண்டனைக்குள்ளாக்குகிறான். மாணிக்கவாசகர் திருவருட் குறிப்பின் வண்ணம் என்ன நிகழ்ந்தாலும் இறைவன் திருவுள்ளமே என்று “சிவனை மறக்கிலம்” என்று துன்பங்களை அனுபவித்தார்.

பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்

திருப்பெருந்துறைச் சிவன் நரிகளைப் பரிகளாக்கித் தாமே குதிரைச் சேவகனாக அமர்ந்து ஆவணி மூல நாளில் மதுரைக்கு வருகிறான்.

குதிரைக் கயிறு மாறும்பொழுது “இன்று இப்போது உள்ள நிலையில் குதிரைகளை ஒப்புக்கொள்கிறாய்! நாளை இவை என்னவாயினும் என் பொறுப்பு இல்லை” என்று கூறுகிறான் குதிரைச் சேவகன்-திருப்பெருந்துறை ஈசன். நள்ளிரவில் குதிரைகள் நரிகளாகின்றன.

மீண்டும் அரசனுக்கு ஆற்றமாட்டாமை. மாணிக்கவாசகருக்கு எழுதிக் காட்டொனாத தண்டனை. மாணிக்கவாசகருக்குக் கிடைத்த தண்டனை பொறுத்தாற்ற இயலாதது!

எனவே இயற்கை சினம் கொண்டது; இயற்கை அழுதது! அதன் விளைவு வைகையாற்றில் பெருவெள்ளம்! மதுரை மாநகரை அழிக்கக்கூடிய வெள்ளம்! வைகை ஆற்றுக் கரையை உடைப்பு எடுக்காமல் அடைக்க வீட்டுக்கு ஓர் ஆள் அழைக்கிறான் அரசன்.

மதுரை மாநகரில் பிட்டு அவித்து விற்றுப் பிழைப்பு நடத்தும் மூதாட்டி - வந்தியம்மை! இவளுக்கு வேறு யாரும் துணையில்லை. ஆள் இல்லாமல் கவலைப்படுகிறாள்.

இந்த நேரத்தில் எடுப்பான தோற்றத்துடன் “கூலி கொடுத்து எனை வேலை கொள்வார் உண்டோ” என்று கூவி வந்தான் ஒரு கூலியாள்! மூதாட்டி வந்தியம்மை அந்தக்