பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

365


படுகின்றான். பெருமானே! நீயும். நினது திருவருளும் உடனாக இப் பூமியில் தோன்றியருளி எம்மை ஆட்கொள்ள வல்லவனே! பள்ளியெழுந்தருள்க!”

மண்ணிற் பிறந்திடும் பிறப்பு, பொய்யன்று; மாயையன்று துன்பம் அன்று. உயிர்களை இறைவன் ஆட்கொள்ளும் இடம் மண்ணகமே! பிரமன், திருமால் ஆகியோர் விண்ணகத்தில் படைத்தல், காத்தல் தொழில்களைச் செய்து பெருமையுடன் வாழ்கின்றனர். ஆயினும், எல்லையில் இன்ப அன்பு கிட்டியபாடில்லை. துன்பத்திற்குக் காரணம் நீங்கவில்லை. அதனால், உய்திக்குரியன நாடாமல் பதவிகளுக்குரிய பணிகளிலேயே காலம் கழிந்து வீணாகப் போகிறதே என்று கவலைப்பட்டு மண்ணிற் பிறக்க ஆசைப்படுகின்றனர். உய்திக்குரிய பணிகள் இறைவனைப் பூசித்தல்; இறைபணி நிற்றல்; அன்பர் பணிசெய்தல் ஆகியன. பதவிகளின் வழிபட்ட கடமைகள் வாழ்த்துக்களைப் பெறுதல்; மரியாதைகளைப் பெறுதல்; மகிழ்ந்திருத்தல்; அதிகாரம் செய்தல்; முகமனுக்கு முகம் மலர்ந்திருத்தல்; இடித்துக் காட்டினால் ஒறுத்து ஒதுக்குதல் முதலியன. பதவிகளின் வழிப்பணியினால் உலகத்தில் தாழ்வென்னும் தன்மை வராது; சூழ்ந்து நிற்பர் அனுமதிக்கமாட்டார்கள்; அதனால், பதவிச் சுழலிலிருந்து விலகி மண்ணிற் பிறத்தல் உய்தற்குரிய நெறியைத்தரும் என்று அமரர்கள் எண்ணுகின்றனர். அதனால், திருமாலும் பிரமனும் கூட மண்ணில் பிறப்பதை. மலர்கொண்டு அருச்சிப்பதை விரும்பி ஆசைப்படுகின்றனர். ஆனால், மண்ணிற் பிறந்தோர் இறைவனை எண்ணிப் போற்றிடாது வாழ்நாளை வாளா கழிக்கின்றனர்.

நம்முடைய சூழ்நிலையில்கூட உய்தற்கேற்ற பணிகளுக்குரிய பணிகள் கொள்ளை கொண்டு விடுகின்றன. இக்கொள்ளையிற் சிக்காதார் யார்? பதவிகள், உய்திக்குரிய பணிகளுக்குத் தடையாக இருப்பின் பதவியைத் துறத்தலே நனறு.