பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எல்லை கடந்த பொருள்!

381


உள்ளார்ந்த அனுபவத்தில் ஈடுபடின் பயன் உண்டு! ஆனால், அத்துறையில் ஈடுபடுவோர் அரியரில் அரியர். அனுபவத்திற்கும் உணர்விற்கும் வாயிலாக அமையாத உரைகாணும் முயற்சி பயனற்றது.

பாட்டுக்குப் பொருள் உண்டு! ஆனால், பாடுவோர் பாட்டினைப் படித்து, உணர்வாரின் தகுதி நோக்கிப் பொருளின் அறிவு கூடும்; குறையும்-மாறுபடும்; முரண்படும். மனிதர்கள் காணும் பொருள், எல்லைகள் உடையது.

எல்லைகளைக் கடந்த பொருளுக்கு, எல்லைக்குட்பட்ட பாட்டும், பொருளும் எப்படி எல்லை காட்ட முடியும்? இல்லாத ஒன்று. அதனால் பட்டினத்தார் கடவுள், உரைகளைக் கடந்தவர்; உரைகளின் வரைகளைக் கடந்தவர்; உரைகள் காட்டும் பொருள்களின் அளவைக் கடந்தவர் என்று பாடுகின்றார்.

“உரையின் வரையும் பொருளின் அளவும்
இருவகைப் பட்ட எல்லையும் கடந்து”

என்பது அருள்வாக்கு!

அறிவு, நிறை நலம் சான்றதாக வளரும் பொழுது “ஞானம்” என்று பெயர் பெறுகிறது. ஞானத்தைத் திருவள்ளுவர் “வாலறிவு” “செம்பொருள்” “மெய்ப்பொருள்” என்றெல்லாம் கூறி விளக்குவார். அறிவு, ஞானமாக முதிர்ச்சியடையும்போது அறியாமையின் நிழல்கூட இருக்காது. அந்த ஞானம் கண்டோரை, கேட்போரைத் தன்பால் ஈர்க்கும்; மணம் நிறைந்ததாக இருக்கும்.

ஞானத்தில் வார்த்தைகள் பேசா! ஞானம் மோனத்தன்மையுடையது. ஞானம் குறிப்பில், உணர்த்தும். ஞானத்தைப் பெறுதற்குத் தகுதி உடையார் குறிப்பில் உணர்வர். இந்தத் தத்துவத்தின் வழிபாடே ஆலமர் செல்வன் வழிபாடு! ஆலமர் செல்வன் இருந்தபடியே இருக்கிறார்.