பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

442

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கண்டு வருந்தாதார் நெஞ்சம் அருளினை அறியாது; பெற முடியாது; அனுபவிக்கவும் முடியாது. வள்ளல் பெருமான் நடமாடும் அருட் கோயிலெனத் திகழ்ந்தார். உயிர் வர்க்கத்தின் துன்பத்தினைக் கண்டு துணுக்குற்றார்; வாடினார்; வருந்தினார்; துன்பத்தினை மாற்றி இன்பம் காண முயன்றார். தம்முடைய சீடர்கள் சரள் கற்களில் உட்கார்ந்து நோகக் கூடாதெனத் தாமே மண் எடுத்துப் பரப்பினார்; அன்று ஆலவாய் அண்ணல் தமது பக்தை வந்திக்காக மண் சுமந்தார். வள்ளலார் தமது சீடர்களுக்காக மண் சுமந்தார். நெஞ்சு நிறைந்த அருள், கருணை நிறைந்த செயலாக வெளிவரும்; இதுவே இயற்கை.

இறைவனை நோக்கி வள்ளல் பெருமான் இரந்து கேட்பது “ஆருயிர்களுக்கு எல்லாம் அன்பு செய்யும்” பண்பாட்டைத்தான்.

‘உள்நாடி உயிர்களுறும் துயர்தவிர்தல் வேண்டும்’

என்கிறார்கள். உயிர்களுறும் துன்ப உணர்வுகள் உடனுக்குடன் தவிர்க்கப்படாது போனால் பின் அவை நஞ்சாகி நானிலத்தை அழிக்கின்றன. இதனை அருளுணர்வுடன் உலகியல் நடத்த விரும்பிய வள்ளல் பெருமான் அறிந்து வலியுறுத்துவது சிறப்புடையதாகும். “ஒத்தாரும் உயர்ந்தாரும், தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளராகி, உலகியல் நடத்த வேண்டும்” என்ற அருட்பா அடிகள் நினைந்து நினைந்து இன்புறத்தக்கன. வள்ளல் பெருமான் “ஒற்றுமை உடையராகி” என்று குறிப்பிடாமல் “ஒருமை யுடையராகி” என்று குறிப்பிடுகின்றார். ஒற்றுமை புறத்தோற்றம்; ஒருமை அக உணர்வு. ஒற்றுமை உண்மையானதல்ல; ஒருமை உண்மையானது. ஆதலாலேயே ஒருமை எனும் சொல்லில் வள்ளலார் பெருமானுக்கு அதிக ஈடுபாடு. இறைவனை ஒருமையுடன் நினைக்க வேண்டும் என்பார்கள் வள்ளல் பெருமான். வள்ளலார் புகழ் வாழ்த்தி, ஒருமையுடையவராக - உயிர்களின் நலம் பேணி நல்லவர்களாக வாழ முயற்சிப்போமாக!