பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

444

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாணிகமாகவும் புகழ்வேட்டுத் திரியும் சாதனமாகவும் மாற்றிவிடக் கூடும். இத்துறையில் நாம் எதிர்பார்க்கின்ற அளவுக்குப் பலன் இல்லாதபோது கடமைகளிலிருந்துகூட விலகத்தோன்றும். இல்லை. தொண்ணுாறு விழுக்காட்டுக்கு மேல் விலகிவிடுவார்கள். அதனாலேயே அப்பரடிகள் ‘பணி செய்க! என்றார். பணியின் விளைவுகளை எதிர்பாரா வண்ணம் அஃறிணைகளைப் போலச் செய்க! மரம் பூத்துக் காய்க்கிறது- கனிகளைத் தருகிறது - எனினும் தன்னுடைய செயலுக்காக அது பெருமிதம் அடைவதில்லை-புகழை விரும்புவதில்லை. கடமையை முறையாகச் செய்து பலனில் பற்றின்றிக் கிடத்தலே நல்வாழ்க்கை என்கிறார். அதனாலேயே “கிடத்தலே” என்று குறிப்பிடுகின்றார். வள்ளுவமும் கூட, உதவியைப் பெறுகின்ற மனிதன் நன்றியறிந்து பாராட்ட வேண்டும் என்று கூறுகிறதே தவிர, உதவி செய்தவன் உதவி பெற்றவனிடமிருந்து நன்றியறிதலை எதிர்பார்க்கச் சொல்லவில்லை. அது நடவாத ஒன்று! அப்படி எதிர்பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சும். ஆதலால், வாழ்க்கை கடமையை - நன்மையைச் செய்வதற்காகவே யாம். நலன் தழுவிய கடமையைச் செய்கிறவர்கள் பலன் பெறுகிறார்கள் - பெறுவார்கள் என்பது உண்மை. கடமையாற்றலின் மூலம் பிறருக்கு நன்மை விளைவதோடன்றிக் கடமையைச் செய்தவர்களுக்கும் ஒரு பெரிய நன்மை தோன்றுகிறது. அதாவது நங்கை ஒருத்தி தன் உடலை நலமாகவும் அழகுப் பொலிவுடையதாகவும் வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவதின் மூலம் அவள் தனது கணவனுக்கு இன்ப நலனும், மகிழ்வும் ஊட்டுகிறாள் என்பது உண்மை. ஆனால், அதே காலத்தில் தான் நோயுறாவண்ணமும் காப்பாற்றப்படுகிறாள் என்பதை மறந்து விடுவதற்கில்லை. அது போலவே கடமைகளைச் செய்வதன் மூலம் நாம் நம்முடைய வாழ்க்கையை இலட்சியச் சார்புடைய தாக்கி-அவ்வழிப் பயனுடையதாக்கி மறுமை இன்பம் பெறுகிறோம்.