பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பணிசெய்க!

445


கடமைகளை உலகியல் பலன்களாகிய நன்றி பாராட்டுதல் - புகழ்பெறுதல்- தகுதிகளைப் பெறுதல் ஆகிய நோக்கத்தோடு செய்யின் கடமைகளின் வழியாக அடையக் கூடிய-வாழ்க்கையின் குறிக்கோளாகிய- எல்லாவித அவல உணர்வுகளினின்றும் விடுதலை பெற்று இன்ப அன்பிலே நின்று திளைத்தல் ஆகியன கைகூடாமற் போகும். ஏனெனில் கடமைகளைச் செய்வதில் பெரும்பாலும் யாரும் போட்டிக்கு வருவதில்லை. ஆனால், மேற்குறித்த பலன்களுக்குப் போட்டி அதிகம். போட்டி என்றாலே அவ்வழிக் கீழ்மைக் குணங்கள் தோன்றுவதியற்கை. கடைசியாகப் போட்டி நிறைந்த செயல்களில் ஈடுபட்டுக் குறிக்கோளை மறந்துவிடவும் கூடும். இந்நிலைமையையே அப்பரடிகள் “குறிக்கோள் இலாது கெட்டேன்” என்று அருளிச் செய்துள்ளார். இத்தகு சிறந்த வாழ்வியல் ஞானம் நம்முடையதாக இருந்தும் அதற்குள்ளேயே நாம் கிடப்பதாக நினைத்துக் கொண்டிருந்தும் வாழ்க்கைச் செய்முறைக்குக் கொண்டு வராமல் வாழ்வது கொடுமை; அது, இலாபம் கருதி வாணிகம் தொடங்கி இழப்பை அணைத்துக் கொள்வது போல! அவல உணர்வுகளிலிருந்து விடுதலை பெற முயற்சிப்போமாக! போற்றிப் புகழ்தலையும் புழுதிவாரித் தூற்றுதலையும் நடுநிலை உணர்வுடன் ஏற்க நம்மை நாம் பக்குவப் படுத்திக் கொள்வோமாக! ‘வசைவெலாம் வாழ்த்தெனக் கொள்வேன்’ என்ற வள்ளலார் வழியில் வாழ்வோமாக! கடமையை மீண்டும் தொடர்ந்து கடமைக்காகச் செய்வோம்! எந்தவிதப் பலனையும் எதிர் பார்க்காது கடமைகளைச் செய்யும் ஞானத்தை முயன்று பெறுவோமாக! அவ்வழியில் திருவருள் நம்மை வழி நடத்துவதாக!