பக்கம்:குப்பைமேடு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குப்பைமேடு

11


நான் எழுதிக் கொண்டே இருப்பேன்; எழுதாவிட்டால் வேறு என்ன செய்வது? பேசிக் கொண்டே இருக்க ஆசை. யாரும் என்னைக் கேட்கமாட்டார்கள். என் பேச்சு அவர்களுக்குப் பிடிப்பது இல்லை. அதனால் எழுதிக் கொண்டே இருக்கிறேன். இது ஒரு தற்கொலை முயற்சி என்று தெரிகிறது; என்ன செய்வது பிரச்சனைகளுக்கு முடிவு சில சமயம் தற்கொலையாகவும் அமை கிறது. சாமானியர்களைப் பற்றி எழுதுவது என் பழக்கம் அவ்வளவுதான் கூற முடியும்.

நீ எழுதுகிறாயே உனக்கு யார் சோறு போடுவார்கள்? என் மனைவி படித்தவள், பட்டம் வாங்கியவள். அவள் சம்பாதித்து என்னை உட்கார வைத்து எழுத வைத்துச் சோறு போடுகிறாள். என்னை எங்கும் போக வேண்டாம் வீட்டைப் பார்த்துக்கொள் என்று கட்டளை இடுகிறாள். தெருவையும் பார்த்துக் கொண்டிருப்பேன். அதனால் வந்த வினைதான் இந்தக் கதை

-2-

“தெருவிலே எதைப் பார்த்தாய்” என்று கேட்பீர்கள்; எவ்வளவோ பார்க்கிறேன், அத்தனையும் சொல்லத் தேவை இல்லை. தினமும் காலையில் சரியாக 9-40 இருக்கும்; ஒரு பெண் சுத்தமாக உடுத்திக் கொண்டு கையில் ஒரு பையை மாட்டிக் கொண்டு இந்த வழி போகிறாள். அவள் அழகி; அதனால் என்னைக் கவர்கிறாள்; மறுக்க வில்லை. அவளைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். அவளை மறையும்வரையும் கவனிப்பேன். அவளோடு பேச முடியுமா என்று ஆசைப்படுவேன். அவள் ஏன் வேலைக்குப் போகிறாள். குடும்ப நிலை என்ன? எப் பொழுது கலியாணம் செய்து கொள்ளப்போகிறாள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/13&oldid=1112417" இலிருந்து மீள்விக்கப்பட்டது