பக்கம்:குமண வள்ளல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதற் காட்சி'

13

குமணன் தான் பெற்ற பெருஞ் செல்வத்தைப் பிறர்க்கும் வழங்கி இன்புறுகிறவனாதலின் அவன் இயல்பை அவன் நாட்டில் வாழும் விலங்கினங்களும் மேற் கொண்டனவோ?’—அவர் சிந்தனை படர்ந்தது. அவர் குமணனைப் பாட ஒரு நல்ல காட்சி கிடைத்துவிட்டது!

குமணன் இருந்த ஊரை அடைந்த புலவர் நேரே அரண்மனையை அணுகினார். குமணன் நல்ல செல்வம் உடையவன் என்பதை அந்த அரண்மனையே எடுத்துக் காட்டியது. அதன் வாசலில் இரு புறமும் இரண்டு யானைகள் நின்றுகொண்டிருந்தன. ‘நாம் வந்திருக்கிற இடம் மற்ற இடங்களைப் போன்றது அன்று. இறைவன் திருவருளால் இம் மன்னனுடைய நட்புக் கிடைத்தால் இனி வரும் ஏழு தலைமுறையின் வறுமையையும் போக்கிக்கொள்ளலாம்’ என்ற நம்பிக்கை அவருக்கு உதயமாயிற்று. வறுமையின் பிடிப்பிலே உள்ளம் வாடிக் குமைந்த அவருக்குத் தெரியும் அந்த வேதனை.

அங்கே இருந்தவர்கள் பெருஞ்சித்திரனாரைப் புலவர் என்று அறிந்து அன்போடு வரவேற்றனர். அவர்களுடைய அன்பான பேச்சும் அவர்கள் காட்டிய மரியாதையும் அவர்களுடைய தலைவனாகிய குமணன் புலவர்களிடம் பெருமதிப்பு உள்ளவன் என்பதைப் புலப்படுத்தின.

“நெடுந் தூரத்திலிருந்து வந்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. முதலில் நீராடிவிட்டு உணவு கொள்ளுங்கள். பிறகு மன்னர் பிரானைக் காணலாம்” என்று அரண்மனை அதிகாரி ஒருவர் சொன்னர்.

“மன்னர் பிரானைக் கண்டு பேசி மகிழ இன்றே வாய்ப்புக் கிடைக்குமா?” என்று கேட்டார் புலவர்.

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/19&oldid=1361695" இலிருந்து மீள்விக்கப்பட்டது