பக்கம்:குமண வள்ளல்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

குமண வள்ளல்

பாட்டாக அல்லவோ இது தோன்றுகிறது?” என்றான்.

“உண்மைதான். ஓரியையும் பாடியிருக்கிறேன்.”

“அப்படியா? புலவர் பாடும் புகழைப் பெற்ற அவர்கள் இறந்தும் இறவாதவர்களாக இருக்கிறார்கள். எங்கே, ஓரியைப் பாடியதைக் கேட்கலாம்.”

புலவர் வல்வில் ஓரி என்ற வள்ளலைப்பற்றிப் பாடியுள்ள அடுத்த பகுதியைச் சொன்னார்.

பிறங்குமிசைக்
கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்.[1]

(உயர்ந்த உச்சியையுடைய கொல்லி மலையை ஆண்ட வல்வில் ஓரியும்.)

“மறுபடியும் ஓரியும் என்று நிறுத்திவிட்டீர்களே! அடுத்தபடி மற்ற வள்ளல்களையும்பற்றிச் சொல்லியிருப்பீர்கள்போல் தெரிகிறது. அவர்கள் புகழையும் கேட்கலாம், சொல்லுங்கள்.”

அடுத்தபடி மலையமான் திருமுடிக் காரியைப் பற்றிச் சொன்னர் புலவர். அவனுடைய குதிரைக்குக் காரி என்று பெயர். அதையும் அவனுடைய மாரி போன்ற வள்ளன்மையையும் பாராட்டியிருந்தார்.

காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த
மாரி ஈகை மறப்போர் மலேயனும்.

(காரி என்னும் குதிரையின் மேல் ஏறிச் சென்று பெரிய போர்களிலெல்லாம் வென்றவனும், மேகத்தைப் போல வழங்கும் ஈகைக் குணமுடையவனும், வலிமை மிக்க போரைச் செய்வதையே தொழிலாக உடையவனுமாகிய மலையமான் திருமுடிக்காரியும்.)


  1. மிசை - உச்சி. வல்வில் ஓரி என்பவன், ஒருமுறை எய்த அம்பு பல இலக்குகளை ஒருங்கே ஊடுருவும்படி விடும் வில் வீரம் உடையவன். அதனால் வல்வில் என்ற சிறப்பு அவனுக்கு அமைந்தது.