பக்கம்:குமண வள்ளல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

குமண வள்ளல்

"நன்றாயிருக்கிறது. குதிரை மலையை, ஊராது ஏந்திய குதிரை என்று நயமாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஓடும் குதிரை பிறர் ஏறிச் செலுத்த அவர்களைத் தாங்குகிறது. இந்தக் குதிரையும் மக்களைத் தாங்குகிறது. ஆனால் அவர்கள் இதை ஊர்வதில்லை. ஊராது ஏந்திய குதிரை என்பது எவ்வளவு அழகாக இருக்கிறது எழினியைப் பாராட்டினீர்கள். இங்கே சிறிது தூரத்தில் பொதினி மலை இருக்கிறதே, உங்களுக்குத் தெரியுமோ? முருகன் எழுந்தருளியிருக்கும் திருமலை அது. அங்கிருந்த பேகனையும் பாடியிருக்கிறீர்களோ?"

“மன்னர் பெருமான் நான் அடுத்தபடி யாரைப் பாடியிருக்கிறேனே அவரையே கேட்பது வியப்பாக இருக்கிறது. முருகன் அடியாராகிய அந்த வள்ளலைப் பாடாமல் இருக்க முடியுமா?”

புலவர் பேகனையும், அவன் மலையையும், அந்த மலையின் உச்சியில் முருகன் கோயில் கொண்டிருப் பதையும் பாட்டில் புலப்படுத்தியிருந்தார்.

ஈர்ந்தண் சிலம்பின் இருள் துரங்கு நளிமுழை
அருந்திறற் கடவுள் காக்கும் உயர்சிமைப்
பெருங்கல் நாடன் பேகனும்.[1]

(ஈரமான குளிர்ந்த மலைப் பக்கங்களில் இருள் தங்கியிருக்கும் செறிவான குகைகளையும் அரிய திறலையுடைய முருகக் கடவுள் திருக்கோயில் கொண்டு பாதுகாக்கும் உயர்ந்த உச்சியையும் உடைய பெரிய குன்றமாகிய பொதினியையுடைய நாட்டுக்குத் தலைவனாகிய பேகனும்.)


  1. * சிலம்பு - மலைப்பக்கம், நளி - செறிந்த, முழை - குகை. கடவுள் என்றது இங்கே முருகனை. சிமை - சிகரம்; உச்சி. பெருங் கல் - பெரிய குன்றம். இக்காலத்தில் பழனியென்று வழங்கும் குன்றமே இது. இதன் பழைய பெயர் பொதினி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/28&oldid=1388639" இலிருந்து மீள்விக்கப்பட்டது