பக்கம்:குமண வள்ளல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

குமண வள்ளல்

பாட்டைக் கேட்ட குமணனுக்கு இப்போது ஓர் ஐயம் எழுந்தது. இந்த ஏழு பேரைப் பாடியும் பாட்டு நிறைவு பெறவில்லை. “இது எப்படி முடியப் போகிறது?” என்பதே அவன் ஐயம். “ஏழு வள்ளல்களையும் நன்றாகப் பாடியிருக்கிறீர்கள்; இந்தப் பாட்டு எப்படி முடிகிறது? இதில் எத்தகைய கருத்தை வைத்துப் பாட்டை நிறைவேற்றியிருக்கிறீர்கள்?” என்று கேட்டான் அரசன்.

“அதைத்தான் சொல்லப் போகிறேனே! எட்டாவது வள்ளல் ஒருவரைப்பற்றிப்பாடிப் பாட்டை நிறைவேற்றியிருக்கிறேன்.”

“எட்டாவது வள்ளலா? புதிதாக இருக்கிறதே! எழுவர் என்று கணக்குச் சொல்லி முடித்துவிட்டீர்களே!”

“உண்மைதான். ஆனல் அந்தக் கணக்கு அதோடு முற்றுப் பெறவில்லை. முற்றுப் பெறுவதாக இருந்தால் எழுவரும் என்று முற்றும்மை கொடுத்திருப்பேன். எழுவர் என்றுதானே சொன்னேன்? அதற்குமேல் எட்டாம் வள்ளலைச் சொல்லியிருக்கிறேன்.”

“அந்த வள்ளல் யார்?” என்று ஆவலோடு கேட்டான் குமணன்.

“புலவர் உலகத்தில் இந்த ஏழு பேர்களையும் வள்ளல்களிற் சிறந்தவர்கள் என்று சொல்லிப் பாராட்டுவது வழக்கம். இப்போது இந்த ஏழு பேர்களில் ஒருவரும் இல்லை. எழுவரும் தம் புகழுடம்பை நிறுத்தி மாய்ந்து மறைந்தனர். பாடி வரும் புலவர்களாகிய பரிசிலர்களுக்குத் தாரகமாக இருந்த இவர்கள் போன பிறகு புலவர்களின் நிலை என்ன ஆகும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/30&oldid=1362506" இலிருந்து மீள்விக்கப்பட்டது