பக்கம்:குமண வள்ளல்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிரியா விடை

33

கொடுத்து விடை தந்தாலும் கொள்ளமாட்டேன். மனமுவந்து, போய் வாருங்கள் என்று சொல்லி அனுப்புவதானால், சிறிது கொடுத்தாலும் பெற்றுக் கொண்டு போவேன். நான் இங்கே அரண்மனையில் உபசாரம் பெறப் பெற என் மனம் முதிர்ந்த என் தாயையும் ‘அறக் கடவுளுக்குக் கண் இல்லையே!’ என்று சொல்லிச் சோறின்றி வாடும் மனைவியையும் நினைக்கிறது. பசியினால் மெலிந்துபோன சுற்றத்தார் சிலரும் இருக்கிறார்கள், காட்டில் உள்ள மரங்களை வெட்டிக் கொளுத்தி, உழுது மலை நெல்லை விதைத்து அதோடு தினையையும் பயிராக்கி, அவை பூட்டை வாங்காமல் இருக்கும்போது, மழை பெய்தால் எப்படி இருக்கும்! அப்படி நான் தாங்கள் வழங்கும் பொருள்களைக் கொண்டு போனால் அவர்கள் எல்லோரும் பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். ஆகவே, மன்னர் பிரான் எப்போது மனம் விரும்பி என்னை அனுப்ப முடியுமோ, அப்போது நான் போகிறேன்” என்று புலவர் சொல்லித் தம் கருத்தை அமைத்து ஒரு பாடலையும் சொன்னார்:


வாழும் நாளோடு யாண்டுபல உண்மையின்
தீர்தல் செல்லாதுஎன் உயிர் எனப் பல புலந்து
கோல்கால் ஆகக் குறும் பல ஒதுங்கி
நூல்விரித் தன்ன கதுப்பினள், கண்துயின்று
முன்றிற் போகா முதிர்வினள் யாயும்.

[வாழவேண்டிய நாளும் ஆண்டுகளும் பல இருப்பதனாலே என் உயிர் போகாமல் இருக்கிறது என்று பல சொற்களை வாழ்க்கையில் வெறுப்போடு சொல்லி, கோலை ஒரு காலாகக் கொண்டு குறுகிய பல அடி வைத்து நடந்து, நூலை விரித்தாற்போன்ற கூந்தலை உடையவளாகி, தூங்கி முற்றத்தை விட்டுப் போகாத முதிர்ச்சியை உடையவள் என் தாய்.]

இது அவர் தம் தாயின் நிலையைச் சொன்ன பகுதி.