பக்கம்:குமண வள்ளல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“4. எல்லோர்க்கும் கொடு”

பெருஞ்சித்திரனார் தம்முடைய ஊருக்கு வந்து சேர்ந்தபோது அவர் வீட்டில் உள்ளவர்கள் அவரைக் கண்டு வியப்பில் மூழ்கினார்கள். அவர் முகத்தில் தெளிவும், உடம்பில் பொலிவும் உண்டாகியிருந்தன. அவர் அணிந்திருந்த ஆடையும் அணிகளும் அவரை மணக்கோலத்தில் இருப்பவரைப்போலத் தோற்றச் செய்தன.

கொண்டு வந்த பொருள்களால் அவர்களுடைய வறுமை அப்போதைக்கு நீங்கியது. அவர் மனைவி அறிவுடையவளாதலின் அவற்றை வைத்துக்கொண்டு செட்டாக வாழத் தொடங்கினாள். அன்று முதல் அந்தக் குடும்பத்தில் ஒளி புகுந்தது. உணவும் உடையும் பிற பண்டங்களும் நிரம்பின. குழந்தைகள் உரமும் எழிலும் பெற்றார்கள்.

ஒவ்வொரு நாளும் குமணனை வாழ்த்திய படியே உணவு கொண்டார் பெருஞ்சித்திரனார். அவருடைய மனைவி தனக்கு இயல்பாக உள்ள உடல் நலத்தையும் வன்மையையும் பெற்றாள். அவர்களுடைய இன்பத்தில் பங்கு பெறப் பல உறவினர்கள் வந்து சில நாட்கள் தங்கிச் சென்றார்கள்.

பல காலமாகத் தன்னைச் சார்ந்தவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்து வரவேண்டும் என்ற விருப்பம் பெருஞ்சித்திரனாருடைய மனைவிக்கு இருந்து வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/47&oldid=1355640" இலிருந்து மீள்விக்கப்பட்டது