பக்கம்:குமண வள்ளல்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குமணன் அரசு துறத்தல்

81

பலத்தைப் பெருக்கிக் கொள்ளவேண்டும்” என்று அமைச்சன் ஒருவன் சொன்னான்.

“ஆம்; அதுவே தக்க வழி” என்று முடிவு செய்தார்கள்.

அன்று முதல் இளங்குமணன் படை கூட்டினான். இவன் எந்த நாட்டின்மேல் படையெடுக்கப் போகிறான்? என்று மக்கள் எண்ணமிட்டார்கள். அவர்களுக்கு அவனுடைய தீய நினைவு தெரியவில்லை. போதிய படைகள் சேர்ந்துவிட்டன என்று தெரிந்து கொண்டபோது, ‘இனி நம் சூழ்ச்சியை நிறைவேற்றப் புகவேண்டும்’ என்ற ஆசை இளங்குமணன் உள்ளத்தில் இடம் கொண்டது. படையைப் பெருக்கிய அரசனும் ஆயுதம் பிடித்த வீரனும் இரும்பு பிடித்த கையும் சும்மா அமைதியாக இருக்குமா?

குமணனுக்கு தன் தம்பி செய்து வரும் சூழ்ச்சி எள்ளளவும் தெரியாது. தம்பி படை சேர்க்கிறான் என்ற செய்தியை யாரோ அவன் காதில் போட்டார்கள். “புதிய நாடு ஆதலால், யாரேனும் வந்து தாக்குவார்கள் என்ற அச்சம் இருக்கலாம். அதனால் பாதுகாப்பின் பொருட்டுச் சேர்க்கிறான் போலும்” என்று அந்த நல்லோன் கூறினான்.

ஒரு நாள் திடீரென்று இளங் குமணனிடமிருந்து ஓலை ஒன்று வந்தது. “உங்கள் நாட்டின்மேல் நாம் படையெடுப்பதாக முடிவு கட்டியிருக்கிறோம். நாட்டை நம்மிடம் விட்டுவிட்டால் போர் செய்ய வேண்டிய அவசியம் இராது. இல்லையானல் போரிட்டுக் கைப் பற்றத் துணிந்தோம்” என்ற அறைகூவலைத் தாங்கி வந்தது அது. அதைப் பார்த்தான் குமணன். ‘தம்பியா இதனை அனுப்பியிருக்கிறான்?’ என்று அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/87&oldid=1362729" இலிருந்து மீள்விக்கப்பட்டது