பக்கம்:குமண வள்ளல்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

குமண வள்ளல்

தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்? இதை அவன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. சற்றே யோசித்துப் பார்த்தான். இளங்குமணன் கொண்ட மண்ணாசை அவன் மன இயல்புக்கு ஏற்றபடியே வளர்ந்து விட்டதை ஒருவாறு உணர முடிந்தது. ஓலையை மறுபடியும் வாசித்தான். அவன் அறிவு சுழன்றது. தலையில் கைவைத்து யோசித்தான்.

‘போர்! என் தம்பி என்னைப் போருக்கு அழைக்கிறான்! இந்தா. உனக்கு என் நாட்டைப் பிரித்துக் கொடுக்கிறேன் என்று சொல்லித் தனியே வாழ வைத்த என்னோடு போர் தொடுக்கத் துணிந்திருக்கிறான். அட மண்ணாசையே! அப்பொழுதே நாடு முழுவதும் வேண்டுமென்று கேட்டிருக்கலாமே ஒரேயடியாகக் கொடுத்திருப்பேனே!. இப்போது, அண்ணனும் தம்பியும் போர்க்களத்தில் நின்று உலகம் கைகொட்டிச்சிரிக்கப் போரிடவேண்டும் என்று அவன் விரும்புகிறான். இந்தக் குலத்தின் பெருமை எங்கே! இந்த நினைவு எங்கே அண்ணனும் தம்பியும் போர்க் களத்தில் சந்தித்து உலகையே அழிவுப் பாதையில் செலுத்திய கதைதான் இன்று பாரதமாக வளர்ந்திருக்கிறதே! அது போதாதென்று மற்றொரு குட்டிப் பாரதப் போரை நிகழ்த்த வேண்டுமென்று இவன் எண்ணுகிறான்? அந்தப் பழைய பாரதத்தைப் பாட ஒரு வியாசர் இருந்தார். இந்தப் போரை யாரும் புகழமாட்டார்கள். அண்ணன் தம்பிகளுக்குள் சண்டையா என்று காறித் துப்புவார்கள். இதுகாறும் புகழில் வளர்ந்து வந்த இந்தக் குலத்துக்கே மாசு உண்டாகிவிடும். அவன் இளமை மிடுக்கில் இப்படிச் செய்யத் துணிந்தான் என்றால், நாமும் அது சரியென்று போர் செய்யப்