பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

குமரிக் கோட்டம்


அடக்கமாகவே பேசுவாள். "யாரங்கே ! மணல் ஏன் இப்படிச் சிதறி இருக்கு? பகவானுக்கான காரியம், பாவபுண்யம் பார்த்து வேலை செய்யுங்கள், கேவலம் பணத்தை மட்டும் கவனித்தால் சரி இல்லை" என்று செட்டியார் சொல்வார்; மற்றவர்கள் முணுமுணுத்தாலும் குமரிமட்டும் குறை கூற மாட்டாள். ஓடிப்போய், மணற் குவியலைச் சரிசெய்வாள்.

மீனா, ஒரு குறும்புக்காரி: கொஞ்சம் கைகாரியுங் கூட, அதற்காகவே அவளுக்கு, மேஸ்திரி ஒருநாள் தவறாமல் வேலைகொடுப்பான். இடுப்பிலே கூடை இருக்கும், அது நிறைய மணல் இருக்காது; ஒய்யார நடை நடப்பாள். பாக்கு இருக்கா அண்ணேன் ! ஒரு வெத்திலைச் சருகு கொடுடி முனி!" என்று யாரையாவது ஏதாவது கேட்டபடி இருப்பாள். கொடுத்தாக வேண்டுமென்பதில்லை. மேஸ்திரியிடம் பேசுவதிலே ரொம்பக் குஷி அவளுக்கு. அவனுக்குந்தான்.

"மேஸ்திரியாரே! இருக்குதா?"

"கருக்கு மீசைக்காரனை, இருக்குதாண்ணு கேக்கறயே!"

"நான் எதைக் கேட்கறேன் நீ எதைச்சொல்கிறே?"

"கேட்டதற்குப் பதில் நீ என்ன இருக்கான்னு கேட்டே ?"

"கொஞ்சம் புகையிலை கேட்டேன்."

"காரமா இருக்கும்" "பரவாயில்லை. அந்தக் காரத்தைக் காணதவளா நானு. கொடுங்க இருந்தா" இப்படிப் பேச்சு நடக்கும்.