உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜடை பில்லை

97

போது அவள் எவ்வளவு மகிழ்ந்துபோனாள் சேந்தமங்கலத்தில் இதைச் செய்த ஆசாரி வரப்பிரசாதியாம், தெய்வங்களுக்குத் திருவாபரணம் செய்வதில் மிகவும் கெட்டிக்காரனாம். அவனிடம் மனுஷர்களுக்கு நகை செய்து தரும்படி கேட்கவே பயப்படுவார்களாம். யாருடைய இஷ்டத்துக்கும் வசப்பட மாட்டானாம். தானே மனசு இசைந்து யாருக்காவது ஏதாவது செய்துகொடுத்தால் அவர்கள் அமோகமாக வாழ்வார்களாம்!

அம்மா வக்கணையாகத்தான் சொன்னாள். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. அம்மாவுக்கு முன்னாலே அப்பா போய்விட்டார். ஐடைபில்லை அவளுக்கு நீண்ட மாங்கிலிய பலத்தைத் தரவில்லையே! அது கிடக்கட்டும். நான் வாங்கிக் கொண்டேனே! எனக்கு ஒரு பெண் பிறந்தாளே; அவள் இருந்தாளா? -

இந்த எண்ணங்களே யெல்லாம் அந்தக் காலத்தில் நான் எண்ணவில்லை. அம்மா தந்ததை ஆசையோடுதான் வாங்கி அணிந்துகொண்டேன். ஜடைபில்லை என்னவோ அழகான வேலைப்பாடு உள்ளதுதான். அன்னம் தன் மூக்கில் ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டிருக்கிறது போல உள்ளே ஒரு சிற்பம். அந்தக் காலத்தில் பழைய சிவப்புக்கு மோஜூ அதிகம்; எந்த வீட்டுக்குப் போனாலும் அந்த வீட்டு அம்மாள் என்னை நிறுத்தி என் தலையைக் குனியச் செய்து அதைப் பார்ப்பாள். அப்போதெல்லாம். எனக்கும் பெருமை தாங்காது.

ஹூம். அதெல்லாம் பழைய கதை. நான் புக்ககத்துக்கு வந்த பிறகும் அதை அணிந்துகொண்டேன். நாளடைவில் சிவப்புக்கு மதிப்புக் குறைந்தது. வைரம் எங்கும் டாலடிக்க ஆரம்பித்துவிட்டது. போலி வைரங்களும் வந்துவிட்டன. விலையிலே எவ்வளவு உயர்ந்ததானாலும் பழைய சிவப்பைத் தீண்டுவார் இல்லை, மட்டமான ரங்கூன் வைரத்துக்கு முன்புகூட அதற்குச் செலாவணி இல்லாமற்.

குமரி-7