பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

குமரியின் மூக்குத்தி

போயிற்று. நான் எப்போதாவது இதைத் தலையில் வைத்துக் கொள்வேன். பெண் பிறந்த பிறகு அவளுக்கு வைத்தேன். "என்ன அம்மா இது, கர்நாடகம்' என்று அவள் சொல்வாள். ஆனாலும் எனக்காக வைத்துக்கொள்வாள். ஆமாம், நான் சொன்னால் அது அவளுக்கு வேதம். எதற்கெடுத்தாலும், அம்மா அதைச் செய்யட்டுமா’, ‘அம்மா அதை வாங்கட்டுமா', 'அம்மா எனக்கு அது வாங்கித்தா' இப்படியே ஒரு நாளைக்கு நூறு தரம் அம்மாவைக் கூப்பிட்டு விடுவாள். அவள் அழகும் சூட்டிகையும் அறிவும் என்னிடம் உள்ள அன்பும் - எதைக் கண்டாலும் ஆசை! எதற்காகத்தான் அப்படி ஆசைப்பட்டாளோ! நான் சீக்கிரம் போய்விடுவேன்; அதற்குள் எல்லாம் பார்த்துவிட வேண்டும் என்றுதான் அப்படி ஆசைப்பட்டாளோ? பாவி எனக்கு அப்போது ஒன்றும் தெரியவில்லை.

ஹூம் மறுபடியும் எங்கேயோ போய்விட்டேனே! இந்தப் பாழும் மனசு எத்தனை நாளானலும் மறக்காது போல் இருக்கிறது. . .

அன்றைக்கு அவளைக் கட்டையிலே வைத்துவிட்டு இதைப் பெட்டியிலே போட்டதுதான். சரியாகப் பதினெட்டு வருஷங்கள் ஓடிவிட்டன. இதைப் பார்த்தால் அம்மா ஞாபகம் வருகிறது. அதோடு அவள் நினைவும். வருகிறது..

சிந்தனையிலே என்னை மறந்து பெட்டியைத் திறந்து வைத்தபடியே உட்கார்ந்து கொண்டிருக்தேன். 'அம்மா! என்று கூப்பிட்டபடியே சொக்கநாயகி வந்தாள். "ஏண்டி இன்றைக்கு இவ்வளவு நேரம்?' என்று கேட்டேன். . - .

"அவர் சாப்பிட்டுவிட்டு உடனே போகிறவர், கொஞ்ச நாழிகை தங்கிப் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்கு முன்தான் கடைக்குப் போனர்" என்றாள்.