பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதிய வீடு

139


தர்மசங்கடமான நிலைமையில் மாட்டிக்கொண்டான் மாரப்பன். அடுத்த ஐந்து நிமிஷத்தில் யந்திரம்போல அவன் கைகள் வேலை செய்தன. குருக்கள் வெற்றிலை பாக்கைத் தந்தார். மாரப்பன் இரண்டு ரூபாயை எடுத்து அதில் வைத்துக் கொண்டான். பூங்காவனம் அன்ன நடை போட்டு வந்தாள். மாரப்பனுக்கு முன் குனிந்தாள். குஷிப் பேர்வழியாகிய குருக்கள் அந்தச் சமயம் பார்த்து, 'அவரை விடாதே; சரியான புள்ளி!" என்று வேடிக்கையாகச் சொன்னார். பூங்காவனம் மாரப்பன் கையில் உள்ள வெற்றிலையைவாங்கக் கையை நீட்டினாள். கையும்கையும் ...!

வீல் என்று குரல் கேட்டது; பெண்கள் இருந்த இடத்திலிருந்துதான். பழனியாயி ஆவேசம் வந்தவளைப் போலக் கத்தினாள். அந்த அப்பாவி, தன் கணவனைத் தன்னிடமிருந்து பறித்துக் கொள்வதற்காகச் சூழ்ச்சி நடப்பதாக எண்ணிக்கொண்டாள், பாவம்! நாகரிகம் தெரியாதவள்! ஒழுக்கமே உயிர் என்று எண்ணி வளர்ந்தவள்! .

வெற்றிலையும் பணமும் கீழே விழுந்தன. பூங்காவனம் திடுக்கிட்டுப் பின்னே பார்த்தாள். அங்கிருந்தவர்கள் யாவரும் பழனியாயியையே பார்த்தார்கள். எல்லோரும், "என்ன? என்ன?’ என்று கேட்டார்கள். அவள் மலங்க மலங்க விழித்தாள்.

மாரப்பன் எழுந்து அவளிடம் சென்று என்ன என்று கேட்டான். "உடனே ஊருக்குப் புறப்படவேண்டும்" என்று அவள் சொன்னாள். குருக்கள் விபூதியும் குங்குமமும் கொண்டுவந்து கொடுத்தார். "ஏதாவது பயந்த கோளாறாக இருக்கும். இங்கே அம்பிகை மதுகரவேணிக்குச் சக்தி அதிகம். எந்தப் பேயாக இருந்தாலும் இங்கே ஆட்டம் போட்டாக வேண்டும்' என்றார். பாவம்! அங்கே எல்லோருக்கும் முன்பு ஆடிய ஒரு பேயைக் கண்டுதான் அவள் பயந்துபோனாள் என்பதைக் குருக்கள் உணரவில்லை; மற்றவர்களும் உணரவில்லை!