பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

குமரியின் மூக்குத்தி

யிருந்தாள். பட்ட மகிஷிக்குப் பெண் குழந்தை இல்லையாதலால், அந்த மூக்குத்தியைப் பெறும் உரிமை, அடுத்தபடி பட்டமகிஷி ஸ்தானம் வகிக்கப்போகும் தனக்குத்தான் என்று அவள் எண்ணியதில் நியாயம் இருக்கத்தான் இருந்தது.

இந்த ஆசையை அவள் பேச்சுவாக்கில் ஒருநாள் அந்தப்புரத்தில் வெளியிட்டு விட்டாள். அதிலிருந்து தீப்பற்றிக் கொண்டது. பாண்டிய அரசர் காது வரைக்கும் அது சென்றது. உண்மையாகவே இது புதிய கலகத்துக்கு விதை என்று எண்ணி அவன்கவலைப்பட்டான்.

பட்டமகிஷிக்கு அடுத்த ராணிக்கு ஒரு மகள் இருந்தாள்."தாயிடமிருந்து மகளுக்குச்செல்வது தான் சம்பிரதாயமே ஒழிய மருமகளுக்குப் போவது தவறு.மகாராணிக்குச் சொந்தப்பெண் இல்லாவிட்டாலும் பெண் முறையில் இருப்பவள் நான். என்னுடைய பெரியம்மாவுக்கு நான் பெண்தானே? ஆதலால், மூக்குத்தியைப் பெறும் உரிமை எனக்குத்தான்” என்றாள் அவள்.

மற்றவர்கள் பார்த்தார்கள். தங்களுக்குக் கிடைக்காமல் தங்களோடு இருக்கும் வேறு ஒருத்திக்குப் போவதாவது என்ற பொறாமை அவர்களுக்கு. அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னர்கள்.

"இந்த மூக்குத்தி ஒரே இடத்தில் இருக்கிறது. மூன்று சோழர் அரண்மனையிலும் பாண்டியர் அரண்மனையிலும் மாறி மாறி இருந்து வருகிறது. இங்கிருக்கும் பெண் அங்கே போனால் உடன் போயிற்று; அங்கிருக்கும் பெண் இங்கே வந்தால் உடன் வந்தது. இப்போது இங்கிருக்கும் பெண் அங்கே போக வழி இல்லை. பெண் இல்லையே ஒழிய மூக்குத்தி இருக்கிறது. ஆதலால், சோழ காட்டு இளவரசனுக்குயாரைமணம்புரிவிக்கிறார்களோ, அந்தப் பெண்ணுக்கே போக வேண்டியது இது" என்றார்கள்.