உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

அறிஞர் அண்ணா



சத்தியவான் சாவித்திரி கதை என்று பலபடித்துமிருக்கிறேன். ஆனால் அவைகளிலெல்லாம், கடவுள் கை கொடுத்துதவினார் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல் அபலையாகிய என் பொருட்டு அவர் செய்வாரா? அவ்வளவு அக்கறை ஆண்டவனுக்கு என்னிடம் இருந்தால் எங்கள் வறுமையை முதலில் ஓட்டி விட்டு மறு வேலை பார்க்கமாட்டாரா! அதையே செய்யாதவர் அவருக்கிருக்கிற வேறு எத்தனையோ வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு என்மீது சோமுவுக்கு அன்பு உண்டாகும்படி செய்ய முன் வரவா போகிறார்! நடக்கிற விஷயமா? சோமுவுக்கும் எனக்கும் மணம் நடந்து, கதைகளிலே கூறப்படுவதுபோல், கஷ்டங்கள் ஏற்பட்டால் கூடப் பொறுத்துக் கொள்ளலாம் என்று நான் எண்ணினேன்.

வறுமையின் காரணத்தால் எனக்கு உலகின் மற்றைய காட்சிகளைக் காண, நேரமோ, வசதியோ கிடையாது. மன மகிழ்ச்சிக்கு வேறு மார்க்கமும் கிடையாது. செல்வவான் வீட்டுப் பெண்ணாக இருந்தால், மனக் கவலை தோன்றாதபடி நாடகம், சினிமா பார்க்கலாம். நகை நட்டு போட்டுக்கொண்டு ஆனந்திக்கலாம். கிளப்புக்குப் போய் பந்தாடலாம். கடற்கரைக்குப் போய் உலாவலாம். கிராம போன் கேட்கலாம். உல்லாசத்துக்கு எத்தனையோ வழிகள் உண்டு. எனக்கோ பணமின்றிப் பெறக்கூடிய ஒரே இன்பந்தான் இருந்தது. அதுதான், சோமுவைப் பற்றிய நினைப்பு. அவரைப் பார்ப்பது, அவரைப் பற்றிப் பேசுவது அவர் விஷயமாக தங்கையோ, அம்மாவோ அப்பாவோ பேசினால் காது குளிரக் கேட்பது இதுவே எனக்கிருந்த இன்பம். இந்த இன்பம் விநாடிக்கு விநாடி வளர்ந்தது. நான் பரிபூரணமாக அவருடைய அடிமையாகி விட்டேன். சோமு மிக நல்லவர் என்று சொன்னேனே அது தவறு. என்னைக் கவர்ந்தவன் எப்படி நல்லவனாக முடியும்?

சோமுவின்மீது எனக்கு வளர்ந்து வந்த காதல் என் மனதில் ஆழமாகப் பதிய ஆரம்பித்து விட்டது. சில சமயங்களில் அவருடைய தரிசனத்திற்காக நான் ஏங்கித் தவிப்பதுண்டு. முக்கியமாக அவர் பூசை செய்யச்