உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமாஸ்தாவின் பெண்

21



சென்றுவிட்டால், குறைந்தது இரண்டு மணி நேரமாகும் வாசலுக்கு வர. அதுவரை அவரைக் காண முடியாமல் நான் படும்பாட்டை அவர் எப்படி அறிவார்? காதல் பலப்பட்டது. கலக்கமும் அதிகரித்தது. நான் அவர் மீது மையல் கொண்டு என்ன பயன்? சோமு எந்தச் சீமாட்டி வீட்டுச் சிங்காரிக்குக் கணவனாகப் போகிறாரோ? என் எண்ணம் எப்படி ஈடேறும்? கடைசியில் என் கருத்து ஈடேறவில்லையானால் என் மனம் உடைந்து விடுமே, அதற்கென்ன செய்வது?

இத்தகைய கலக்கத்தினால் பல இரவுகளில் நான் அழுததுண்டு. பெரியதோர் ஆபத்தில் சிக்கிக்கொண்டதை உணர்ந்தேன். சோமுவின் மனநிலையோ எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள மார்க்கமுமில்லை. அவர் தமது 'பக்தி'யைக் காட்டிக்கொள்ள கட்டுக்கட்டாக விபூதி பூசிக்கொண்டு காலணா அளவுள்ள சந்தனப் பொட்டிட்டுக் கொண்டிருந்தார். என் விஷயமாக அவர் என்ன கருத்துக் கொண்டிருக்கிறார் என்பதைக் காட்ட ஒரு அடையாளம் தென்படவில்லை. பல வஸ்துக்களை அவர் பார்ப்பது போல் என்னைப் பார்த்தாரே தவிர, அவருடைய பார்வையிலே தனி விசேஷம் இருக்கவில்லை. கண்ணால் பேசியிருக்கலாம், மனம் இருந்தால். அவரே பக்தர்களின் பாடலைக் கேட்டுக் கேட்டு, மௌனமாக இருக்கும் பழக்கங்கொண்ட தேவனைப் போல், என் கண்களின் வேண்டுகோளைக் கண்டும், அசையாத உள்ளங் கொண்டவராகவே இருந்தார். நான் அப்படியொன்றும் அழகற்றவளுமல்ல!

என் மனக் குறையைத் தீர்க்க யார் முன்வருவார்கள்?ஒரு சமயம் எனது ஆழ்ந்த இருதயப் பூர்வமான காதல், சோமுவுக்குத் தெரிய நேரிட்டால், என்னை மகிழ்விக்க இசைவாரோ? ஆனால் எப்படி அவரிடம் என் காதலைத் தெரிவிப்பது? மிக சாந்த குணசீலராகிய சோமு என்னைப் பற்றி தவறாகக் கருதிவிட்டால் என்ன செய்வது? வீட்டிலே அம்மா அப்பாதான் என்ன சொல்லமாட்டார்கள்? ஊராரும் ஏசுவார்களோ? நான் என்ன செய்வேன்? சோமுவை மறந்து விடவும் முடியவில்லை. மன நிலையை அவருக்குத் தெரிவிக்க மார்க்கமும் தோன்றவில்லை. நான் தத்தளித்தேன்.