உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

அறிஞர் அண்ணா



சாந்தாவுக்கு இவைகளை நான் கூறவில்லை. ஆனால் பெருமூச்சும் கண் அடிக்கடி எதிர் வீட்டின்மீது ஏக்கத்தோடு செல்வதும், இரவில் என் தலையணை நனைந்து போவதும், என் மனதில் இருந்த எண்ணங்களைச் சாந்தாவுக்குத் தெரிவித்துவிட்டன. அவளோ சிறு பெண்! அவளால் என்ன செய்ய முடியும்!

சாந்தா எப்போதாவது சோமுவிடமிருந்து புத்தகம் வாங்கிக் கொண்டு வருவாள். புராணக் கதைகளே சோமு தருவார். ஒருநாள் எனக்கோர் யுக்தி தோன்றிற்று. கண்ணபிரான்மீது காதல் கொண்ட ருக்மணியின் மனோநிலை வர்ணிக்கப்பட்டிருந்த பாகத்தை சோமு தந்தனுப்பிய பாரதத்தில் நான் பென்சிலால் கோடிட்டு அனுப்பினேன். அப்போது என் நெஞ்சம் துடித்ததை என்னென்பேன். அவர் அதனைக் கவனிப்பாரா? கவனித்தாலும் விஷயம் இன்னதென்று புரிந்து கொள்வாரா? துஷ்டச்சிறுக்கி என்று என்மீது சீறுவாரா? அலமுவிடம் காட்டி விடுவாரோ? அப்பாவிடம் உன் மகளின் யோக்யதையைப் பார் என்று கூறுவாரோ? என்ன நடக்குமோ என்று பயமாகவே இருந்தது. நான் கோடிட்டு அனுப்பிய பாகத்தில் ஆபாசமான வார்த்தைகள் ஏதும் இல்லை.

"கண்ணன்மீது நான் கொண்டுள்ள காதலின் ஆழம், கடலாழத்தைவிடப் பெரியது. அவரே என் ஆவி. அவர் இன்றி நான் வாழேன். ஆனால் அந்தோ என் மனநிலை அவருக்குத் தெரியுமோ? தெரியவந்தால் அவர் என் காதலை ஏற்றுக் கொள்வாரோ? ஏளனஞ் செய்வாரோ? என் செய்தியை அவரிடங் கூற யார் இருக்கிறார்கள்? இரவுக் காலங்களில் என்னை வாட்டி வதைக்கும் நிலவே! கனல்போல் வீசிக் கருத்தைக் கெடுக்கும் காற்றே! பொறாமை மூளும்படி உன் சந்தோஷத்தைப் பற்றிக் கொஞ்சிக் கொண்டிருக்கும் கிளியே! கூவும் குயிலே! ஆடும் மயிலே! தாமரை பூத்த குளத்திலே தாண்டவநடை நடக்கும் அன்னமே! யார் போய் கூற முன்வருவீர்கள்" இதுதான், நான் கோடிட்ட பாகம்.