உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அறிஞர் அண்ணா



அவனுக்கு அதிகம். நான் வீட்டிலேயே கிடப்பவள், அவன் வெளியே போய் வருவான். வறுமையின் கொடுமைகள் அவனுக்கு அதிகமாக உறுத்தலாயின. தனது நண்பர்களின் நாகரிக உடை தனது அழுக்குக் சட்டையைப் பார்த்துப் பரிகாசம் செய்வது போலிருக்கிறது. தானோர் திருஷ்டி பரிகாரம்; சனீஸ்வரூபம்! என்று ஏதேதோ பேசுவான். தன்னைத்தானே நொந்து கொள்வான். வாட்டத்தைக் கொடுத்த வறுமை இராகவனுக்கு முரட்டுத்தனத்தையும், பணக்காரர் என்றால் ஒரு வெறுப்பையும், நீதி, நேர்மை, பாவ புண்ணியம், தர்மம், தயை என்று பேசப்படுவதிலே கசப்பையும் கொடுத்து விட்டது. சதா கடுகடுத்த முகத்தோடுதான் இருப்பான். "விரசநாயகன் வந்தான்" என்று சாந்தா, கேலி செய்வாள். பேசும்போது துடுக்குத்தனமாக இருக்கும். அதிலும் பணக்காரர் பேச்சை எடுத்தால் போதும், சீறுவான். மனத்திலே அவனுக்கு நம்பிக்கை கிடையாது. கடவுளை பற்றிகூடக் கேலி செய்வான்.

சோமுவிடம் பேசுவது இராகவனுக்கு இஷ்டமில்லை என்ற போதிலும் வீடேறி வந்தவனிடம் எப்படிப் பேசாமலிருப்பதென்று வேண்டா வெறுப்புடன் பேசுவான். சோமு மிக்க வாத்சல்யத்துடன் பேசுவதுடன் மத விஷயமாக இராகவனுக்குப் போதிப்பதுண்டு. சில சமயங்களில் இராகவன் அவைகளைக் கேட்டுக் கொள்வான். சில சமயங்களில், "சோமண்ணா, வேறு ஏதாவது பேசுங்கோ, கேட்போம். இந்த இழவுப் பேச்சு வேண்டாம்" என்று கூறிவிடுவான். "சிவ! சிவா! இராகவா, அப்படிச் சொல்லாதே. அபச்சாரம்" என்பார் சோமு. "அபச்சாரமாவது கிரகச்சாரமாவது" என்று இராகவன் முரட்டுத்தனமாகக் கூறிவிட்டு வெளியே போய்விடுவான். அப்பா,அம்மா இராகவனிடம் கோபித்துக் கொள்வார்கள். வைவார்கள். நான் மட்டும் கோபிப்பதில்லை. இராகவன் முரட்டுத்தனமுடையவனாவதற்கும், வெறுத்துப் பேசுவதற்கும் காரணம் வறுமையின் கொடுமைதான் என்பது எனக்குத் தெரியும். சிற்சிலசமயங்களில் இராகவன் தன் மனதைத்திறந்து காட்டுவதுபோல் என்னிடம் பேசுவான். கேட்கமிக உருக்கமாக இருக்கும் அவனது பேச்சு.