உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அறிஞர் அண்ணா


     சொல்லலாகுமா? நான் ஏது? நீர் ஏது? எல்லாம் அவன்
     மயம்! எல்லாம் அவன் செயல். உம்மை
    இலட்சாதிபதியாக வைத்திருப்பது அவன் செயல்
    என்னைப் பிட்சாதி காரியாக வைத்திருப்பதும் அவன்
    செயல்! மிக நல்லவன் அவன்.

சோமு : இராகவா! நீ நாத்திகம் பேசுகிறாய், நாக்கு
     கூசவில்லையா?

இராகவன் : இதற்குப் பெயர் நாஸ்திகமா? எனக்குத்
      தெரியாது. அவனன்றி ஓர் அணுவும் அசையாது. எனது
       நாக்கின் அசைவும் அவனது செயல்தான்!

சோமு : பிராமண குலத்தில் உதித்து இப்படிப் பகவத்
     வேஷியாவதா?

இராகவன் : பூர்வகர்ம பலன்!

சோமு : நீ வக்கீல் போல பேசுகிறாய். நீ மட்டும் வக்கீல்
     வேலைக்குப் படித்திருந்தால்.

இராகவன் : கிழிந்த கருப்பு சட்டையுடன் வெளியே
     கிளம்பியிருப்பேன், வேறென்ன நடந்திருக்கும்!

சோமு : நீ சத் விஷயங்களைப் படிக்கவேண்டும்.

இராகவன்: அருமையான புத்தகத்தைப் படித்துக்
        கொண்டே இருக்கிறேன். உலகத்தை விட
        உன்னதமான புத்தகம் இருக்கிறதா அண்ணா! அதை
        நான் படித்துக் கொண்டு இருக்கிறேன்.

இந்தச் சம்பாஷணைக்குப் பிறகு சோமு மௌனமாக இருந்து விட்டுப் போய்விட்டார். நான் இராகவனைத் திட்டினேன். நல்லவர்கள் மனதை நோகச் செய்வது அழகல்ல என்றேன். நான் இவ்விதம் இராகவனுக்குப் புத்தி சொன்னதேயில்லை. அன்று அவனது பேச்சு சோமுவின் முக விலாசத்தையே மாற்றி விட்டதைக் கண்டேன். ஆகவே எனக்குக் கோபம் பிறந்தது. இராகவன் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டுச் சிரித்தான். "அந்தச் சிரிப்பின் அர்த்தம் என்ன?" என்று நான் சீறினேன்.