உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமாஸ்தாவின் பெண்

43



கண்டிக்கலாயினர். கோர்ட்டுக்கு அப்பா போக நேரிட்டது. கடன் தொல்லையுடன் அப்பாவுக்கு உடலிலும் தொல்லை ஏற்பட்டுவிட்டது. கிடைக்கிற சம்பளத்திலே பகுதி, பழைய கடனைத் தீர்க்கச் சரியாகிவிடும். சாப்பாட்டுக்கே சனியன் பிடித்துக் கொண்டது. சாந்தா புஷ்பவதியானாள்.அப்பா காய்ச்சலில் விழுந்தார். ஒரு மாதமாக வேலைக்குப் போகவில்லை. எங்கள் நிலைமை எப்படி இருக்குமென்பதை ஈவு இரக்கமுள்ளவர்கள் சற்று யோசித்துப் பாருங்கள். கடன்காரர்கள் தொல்லை. காய்ச்சல், வருமானம் பூஜ்யம், வாட்டம், இவைகள் போதாதா ஒருவரைச் சித்திரவதை செய்ய? புண்ணில் வேலிடுவது போல, அடிக்கடி வேதகிரி வருவார். "ஐயருக்குக் காய்ச்சல் எப்படி இருக்கிறது?" என்று விசாரிப்பார். மிராசுதார் வந்து போகும்போதெல்லாம், 'காந்தா என்ன சொல்லுகிறாய்' இந்த வறுமையை ஓட்டும் வல்லமை எனக்கிருக்கிறது, என்னை வசீகரிக்கும் அழகும் இளமையும் உன்னிடம் இருக்கிறது. பரஸ்பரம் உதவி செய்து கொள்வோம். சம்மதமா?" என்று என்னைக் கேட்பது போலிருக்கும் அவருடைய பார்வை.

அப்பாவை மதனபள்ளி ஆஸ்பத்ரிக்கு அழைத்துக் கொண்டு போனால்தான் பிழைப்பார் என்று டாக்டர் முடிவாகக் கூறிவிட்டார். அம்மாவின் கண்களில் நீர் தாரை தாரையாகப் பெருகிற்று. மஞ்சளும் குங்குமமும் போகுமே, மக்கள் தெருவில் நின்று திண்டாடுமே, நான் என்ன செய்வேன், ஜகதீஸ்வரி! என்று அம்மா அழுதார்கள். ஜகதீஸ்வரிக்கு இந்தக் கஷ்டம் எப்படித்தெரியும்! அவள் வாழ்கிறாள், வாட்டம் வருத்தமின்றி.

மதனபள்ளிக்குப் போகவேண்டுமாம். மதன பள்ளிக்கு நான் வர இசைந்தால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தர மிராசுதார் இருக்கிறார். அப்பாவின் சாவைத் தடுக்க வேண்டுமானால் நான் மிராசுதாருக்குச் சரசக் கருவியாக வேண்டும். ஆனால் அது நேரிட்டால் உலகம் பழிக்காதோ? அப்பாவின் மானம் பறிபோகுமே. குடும்பக் கீர்த்தியும், குலப் பெருமையும் என்ன கதியாவது, வறுமையை விரட்ட நான் விபசாரத்தை உதவிக்குக் கூப்பிடவேண்டிய நிலை